இரண்டு நாளில் 13,247 பேரை சென்றடைந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
வயது முதிர்வின் காரணமாக தங்களுடைய அத்தியாவசிய மருத்துவ தேவைக்காக மருத்துவமனையை நாட முடியாமல் பலரும் இன்று வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டமான ‘ மக்களைத் தேடி மருத்துவம் ‘ இரண்டு நாட்களுக்குள் 13,247 பேரை சென்றடைந்திருக்கிறது என்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனோ சூழல் மற்றும் வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாமல் எத்தனையோ சர்க்கரை நோயாளிகளும் இரத்த அழுத்த நோயாளிகளும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவத்திற்கு மருத்துவமனையை நாட முடியாமல் வீட்டில் கிடந்து தவிக்கின்றனர். அவர்களை குறிவைத்து தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
” மக்களைத் தேடி மருத்துவம் இப்படி ஒரு திட்டம் இது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் ’அம்மா உணவகம்’ என்று தொடங்கப்பட்ட திட்டம் இன்று பலரின் பசியை ஆற்றிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த மருத்துவ திட்டமும் இன்று பலரின் உயிர் காக்கும் என்பதில் ஐயமில்லை.”