யுவன் என்னும் இசை அரக்கனின் 25 வருட இசை சகாப்தம்!
ஒரு 16 வயது சிறுவன், அவனை ஒரு இசை வாய்ப்பு தேடி வருகிறது. ஆம் அன்றே துவங்கியது யுவன் என்னும் இசை அரக்கனின் சகாப்தம்.
ஒருவர் ஒரு பீல்டில் இறங்கி விடலாம், ஆனால் என்ன தான் பின்புலம் என்று ஒன்று இருந்தாலும் திறமை தானே ஜெயிக்கும், 1996 அரவிந்தன் என்னும் படத்தில் அறிமுகமானர் 16 வயது யுவன் என்னும் சிறுவன். தொடர்ந்து 3 படங்கள் தோல்வி, விட்டு விடவில்லை முயல்கிறார் அதற்கு பின் அடுத்தடுத்து ஹிட் ஆல்பங்கள். கோலிவுட்டில் யுவனின் சாம்ராஜ்யம் அந்த சமயத்தில் தான் எழத்துவங்கியது.
1999 ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ , அதே வருடத்தில் ’உனக்காக எல்லாம் உனக்காக’ அதற்கு பின் 2000-யில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ‘தீனா’ இந்த மூன்று படத்திற்கு பின் யுவனுக்கு முழுக்க முழுக்க ஏறுமுகம் தான். எங்கும் யுவன் எதிலும் யுவன் என்பது போல பெரிய பெரிய இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் அவரின் இசையும் தனியாய் ஜொலிக்க துவங்கியது.
இசை மட்டுமில்லாது அவரின் குரலும் வெல்ல துவங்கியது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் என்று வரிசையாக ஹிட் கொடுக்க துவங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஆல்பம் முழுக்க ஹிட் கொடுக்க முடியும் என்பது சில சில இசையமைப்பாளரே செய்து வந்தனர். ஆனால் யுவன் அந்த கட்டத்தில் அதை அசால்ட்டாக நிகழ்த்தி வந்தார்.
பில்லா, மங்காத்தா என்று அவர் கொடுத்த ஆல்பங்களிலும், பி.ஜி.எம்மிலும் கோலிவுட்டே அரண்டு போனது. தியேட்டர்களில் டைட்டில் கார்டின் போது நடிகர்களின் பெயர் திரையில் வரும் போது தியேட்டர் எப்படி அலருமோ, அதுக்கு இணையாக யுவனின் பெயர் திரையில் வரும் போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும். அந்த அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்து வைத்து இருப்பவர் தான் யுவன் சங்கர் ராஜா.
“ எங்கு பார்த்தாலும் ‘கம்பேக் பார் யுவன், கம்பேக் பார் யுவன்’ என்ற பதிவுகளை தற்போதெல்லாம் பார்க்க முடிகிறது. அவர் என்றைக்கு வீழ்ந்தார் கம்பேக் கொடுப்பதற்கு? அவர் அன்றும் இன்றும் அதே வெறி பார்மில் தான் இருக்கிறார் ஆனால் செல்வராகவனைப் போல இன்றைய இயக்குநர்களுக்கு அவரின் இசையை பயன்படுத்த தெரியவில்லை. அவ்வளவு தான் “