அருவி | ‘ஒரு படம் ஏற்படுத்திய தாக்கம் பல வருடங்கள் ஆகியும் கூட இருக்குமா என்றால் ஆம் இருக்கிறது தான்!’
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்களின் இயக்கத்தில், அதிதீ பாலன் அவர்களின் நடிப்பில் உருவாகி கடந்த 2016-யில் வெளியான திரைப்படம் தான் அருவி.
ஒரு சாதாரண குடும்பத்தில் ரொம்பவே பாசம் காட்டி வளர்க்கப்படும் ஒரு பெண், பள்ளி, கல்லூரி என படிப்படியாக சென்று கொண்டு இருக்கும் போது, தீடீரென அவள் வாழ்வை புரட்டிப்போடும் ஒரு சம்பவம். அவளுக்கு உடல்நலக்குறைவு என மருத்துவமனைக்கு செல்லும் போது, அவளுக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிந்து கொள்ளும் குடும்பம், அவளின் தப்பான நடவடிக்கைகளால் தான் அவளுக்கு இந்த நோய் வந்து இருக்கும் என கருதி அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பெற்றோர்கள். அதற்கு பின் இந்த சமூகம் அவளை பார்க்கும் விதம், அவளை நடத்தும் விதம், அவள் இந்த சமூகத்தின் இறுக்கமான பிடியில் இருந்து மீண்டாளா, இல்லையா, அவளை அந்த நோய் என்ன செய்தது என்பது தான் கதைக்களம்.
அருவியாக அதீதி பாலன், படத்தின் ஒட்டு மொத்த அழுத்தமும் அவர் தான், திரையில் அவரின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு அதீதமான உணர்வுகள் வந்து நம்மை தாக்கும், ஒரு படத்திற்கு வந்த உணர்வே இருக்காது, நாம் அந்த கதைக்களத்திற்குள் அப்படியே இருப்பதாக தோன்றும், ஒவ்வொரு சிறு சிறு அசைவிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அதீதி. ஒரு டிவி நிகழ்ச்சியின் டைரக்டர், அந்த டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளனியாக லக்சுமி கோபால சாமி, பீட்டராக பிரதீப் ஆண்டனி, எமிலியாக அஞ்சலி வரதன் என ஒவ்வொரு கதாபாத்திரமும், கதாபாத்திரங்களாகவே படம் முழுக்க இருக்கும்.
ஒரு படத்திற்கு எழுத்தும் அந்த எழுத்தை அப்படியே காட்சிப்படுத்துவதும் அவசியம் ஆகிறது. இந்த இரண்டும் உயிர் பெற்றால் தான் படமானது ஆடியன்சிடம் கனெக்ட் ஆகும். அந்த வகையில் அருண் புருஷோத்தமன் ஒரு ஆகச்சிறந்த எழுத்தாளன் என்றே சொல்லி விடலாம். அருவியானவள் ஒவ்வொரு முறையும் திரையில் அழும் போதெல்லாம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கண்களும் அந்த கணம் அருவியாகி நின்றது. அது தான் இப்படத்தின் வெற்றி என்றே சொல்லலாம். கிளைமேக்ஸ் காட்சிகளில் எல்லாம் இருக்கையை விட்டு எந்திரிக்கவே முடியாமல் ஏதோ ஒரு உணர்வுகள் பலரின் இதயத்தை அப்படியே உருக்கிக் கொண்டு இருந்ததை எல்லாம் கண்களால் பார்க்க முடிந்தது.
ஒரு படத்தின் வெற்றி என்பது நிச்சயம் அந்த படத்தின் வசூலில் இல்லை, அந்த படம் அதை பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் என்ன தாக்கத்தை கொடுக்கிறது என்பதில் தான் இருக்கிறது. இப்படம் ஒரு அமைதியைக் கொடுத்தது, இதயத்தில் ஒரு கணத்தையும் தாக்கத்தையும் கொடுத்தது, கிட்டதட்ட 7 வருடங்கள் கழித்தும் கூட இன்னமும் அந்த தாக்கமும் கணமும் இதயத்தில் இருக்க தான் செய்கிறது. அது தான் அருவியின் ஆகச்சிறந்த வெற்றி!
“ எங்காவது அந்த அருவி அவளின் அந்த அழகிய புன்னகைகளுடன், அவளின் அந்த அழகிய குழந்தை தனத்துடன் யாவினிலும் இருந்து மீண்டு வாழ்ந்து கொண்டிருக்க மாட்டாளா? ஏன் அவளுக்கு இப்படியாக வேண்டும்?, அவள் நல்ல பெண் தானே?, என மனது இன்னமும் அந்த அருவி குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறது, எழுப்பிக் கொண்டே தான் இருக்கும் “