’உனக்கு என்னப்பா, பைக்லயே போற பைக்லயே வர்ற’ இதை அடிக்கடி வலியோடு கேட்பவர்களா நீங்கள்?
மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜென்ஸி போன்ற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்திற்கு எளிதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் படும் அவஸ்தை என்ன என்ன என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும்.
பெரும்பாலும் மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜேன்ஸி போன்ற வேலைகளை எல்லாம் இந்த சமூகம் எளிதானதாக பார்க்கிறது. ‘பைக்லயே போறான், பைக்லயே வர்றான், வாழ்றான்பா’ என்னும் ஒரிரு வார்த்தைகளுக்குள் அவர்களின் வலியை இந்த சமூகம் ஏளனம் செய்து விடுகிறது. உண்மையில் அந்த வேலைக்கு பின்னால் இருக்கும் வலிகள் என்பது அதைப் பார்ப்பவர்களுக்கு தான் தெரியும்.
தினமும் பைக்கில் நூறு கிமீக்கு மேல் செல்ல வேண்டும், தினசரி டார்கெட், மண்டை வெடிக்கும் அளவுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம், இவரிடம் கடனை வசூல் வாங்கியே ஆக வேண்டும், இதனை விற்றே ஆக வேண்டும், இருப்பதையாவது பிடுங்கி விட்டு வா என்பதெல்லாம் இவர்களது தினசரி வேலைகளின் அங்கங்கள், ஒரு பக்கம் உடல் உபாதைகள், தினசரி குறுக்கு வலிக்கு மாத்திரை, ஹோட்டல் சாப்பாடு, அலைந்து கொண்டே இருக்க நேரிட்டால் சாப்பாட்டை மறந்து விட்டு எங்காவது ஒரு கடையில் அவசர டீ என தினம் தினம் வேலையே ஒரு அழுத்தத்தில் தான்.
தனக்கே தேவையில்லாத ஒரு பொருளை, பிறரிடம் இது ஒரு அத்தியாவசியம் தான் என இல்லாத கதைகளை எல்லாம் சொல்லி விற்கும் போது, மனதின் ஓரத்தில் நாமே நமக்கு குரூரமானவர்களாக தெரிவோம். இருந்தாலும் அது தானே வேலையாக இருக்கிறது, ஒழுங்காக செய் என மூளை கட்டளையிட்டு செய்ய சொல்லும் போது செய்து தான் ஆகுவோம். சமூகத்தில் குடும்பம் என்னும் அங்கத்திற்குள் சிக்கிய ஒருவரும் ஏதாவது ஒரு கணத்தில் சுயத்தை இழக்க வேண்டி இருக்குமானால், இந்த மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜேன்ஸி போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள் தினம் தினம் தன் சுயத்தை இழந்து தான் ஆக வேண்டி இருக்கிறது.
ஒரு பக்கம் கடனை திருப்பி கேட்கும் போது, ’கஸ்டப்படுறேன்யா, முடிலய்யா, எப்படியாவது மொத்தமா அடைச்சிடுறேன்யா’ என்று தேம்பி அழும் கடனாளியின் குரலுக்கு ஆறுதல் சொல்லி அவருக்கு இணங்க நினைக்கும் போது, அந்த இழகிய மனதை உடைத்து விட்டு, இறுக்கத்தை வரவழைத்துக் கொண்டு குரூரம் காட்டி, ‘ஒழுங்கா அடுத்த வாரத்துக்குள்ள கட்டிரு’ என சொல்லிவிட்டு வரும் போது, அங்கு இரண்டு இதயங்கள் குமுறிக் கொண்டு இருக்கும். ஒன்று கடனாளியின் இதயம், இன்னொன்று கடன் கொடுத்தவனின் சார்பாக, கடனை திருப்பிக் கேட்ட அந்த இழகிய குரூர இதயம். ‘அய்யோ, அழுத ஒரு இதயத்திற்கு இணங்காமல், குரூரம் காட்டி விட்டேனே, நான் இவ்வளவு இரக்கமற்றவனா’ என யோசித்துக் கொண்டே அடுத்த தெருவிற்கு அதே பைக்கை எடுத்துக் கொண்டு, தன் சுயத்தை இழக்க கிளம்பி இருப்பான் அவன்.
“ உழைப்பு, சம்பளம் இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு 30 நாட்கள், அந்த 30 நாட்களும் அவர்கள் அனுபவிக்கும் அழுத்தமும், வலியும் என்பது ஏராளம், அந்த வலிகளை ஒரிரு எளிதான ஏளன வரிகளுக்குள் அடக்கி விட வேண்டாம் “