காதல் தோல்வி, துரோகங்களில் இருந்து மீள்வது எப்படி?
இன்றைய இளைஞர்களால் அவ்வளவு எளிதில் காதலில் ஏற்படும் தோல்வி, துரோகங்களை தாங்கி கொள்ள முடியவில்லை. அதில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
காதலில் தோல்வி, துரோகங்கள் என்பது இன்று இருபாலருக்குமானதாய் இருக்கிறது. பெரும்பாலும் இன்றைய காதலில் தோல்விகள், துரோகங்கள் என்பது அதீத எதிர்பார்ப்புகள் மற்றும் அவசர அவசரமாய் எடுக்கும் முடிவுகள் ஆகிய இரண்டினாலே பெரும்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு தோல்விகளோ, துரோகங்களோ நிகழும் போது இதயம் உடைந்து நொறுங்கி விடும். வாழ்க்கையையே மொத்தமாக இழந்ததாய் தோன்றும். தற்கொலை எண்ணங்கள் தோன்றும், பழி வாங்கும் எண்ணங்கள் எல்லாம் தோன்றும்.
சரி இத்தகையை எண்ணங்களில் இருந்தும், உடைதலில் இருந்தும் மீள்வது எப்படி?
முதலில் நாம் அந்த காதலில் ஏற்படுத்திக் கொண்ட நினைவுகளை அழிக்க வேண்டும். அவர்களுடைய மொபைல் எண், அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், அவர்கள் கொடுத்த கிப்ட்கள் போன்றவற்றை நம்மில் இருந்து விலக்கி கொள்வது, இல்லையேல் அழித்து விடுவது நல்லது. தொடர்ந்து அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தால் நம்மை நாமே இழக்க நேரிடும். சமூக வலைதளங்களில் இருந்து அவர்களுடன தொடர்புகளை முழுவதுமாக நீக்கி விடுவது சிறந்தது. தொடர்ந்து ’ஏன்? எப்படி? எதற்கு?’ என அவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் அவர்கள் திரும்பி வந்து விட போவதில்லை. எந்த கேள்விகளும் கேட்காமல், எந்த பதிலும் எதிர்பார்க்காமல் கடந்து செல்வது நல்லது.
அமைதி, சாந்தத்தை நிலை நிறுத்துவது
மனது அலைக்களியும் போது அது அமைதியையும், சாந்தத்தையும் இழக்கும், அதுவும் தோல்விகள் துரோகங்களின் போதெல்லாம் மனது முற்றிலும் கலவரத்தின் பிடியில் இருக்கும். அந்த கணத்தில் மனதை எதையும் யோசிக்க விடாமல் ஏதாவது ஒன்றை இழுத்துப் போட்டு செய்து கொண்டே இருக்க வேண்டும். பிடித்த உறவினர்களுடன் பேசுவது, பிடித்த பாடல் கேட்பது, பிடித்த விளையாட்டை விளையாடுவது, பிடித்த வேலைக்காக படிப்பது, பிடித்த உணவை சாப்பிடுவது, நண்பர்களுடன் எங்காவது செல்வது, பிடித்த சினிமாவை தியேட்டரில் சென்று பார்ப்பது போன்றவற்றை எல்லாம் செய்யலாம். அப்படி செய்யும் போது மனது வேறு எதையும் யோசிக்காமல் பிடித்த விஷயங்களின் பிடிகளுக்குள் அடங்கி இருக்கும்.
ஏக்கங்களை தொலைத்தல்
ஒருவர் விட்டுச் சென்றாலோ இல்லை துரோகம் செய்தாலோ நாம் வாழ்வில் ஏதோ ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாய் தோன்றும். அந்த நிமிடத்தில் ஏக்கங்கள் என்பது மிக மிக அதிகமாக இருக்கும். மனது அதிகமாய் ஆறுதல் தேடும். பெரும்பாலானோர் உடனடியாக அவசர அவசரமாக இன்னொரு காதலையும் தேட ஆரம்பித்து விடுவர், அந்த அவசர கதி, அல்லோ கதியாகவும் எளிதில் மாறக்கூடும். பின்னர் முதலில் இருந்து மீண்டும் வலியை அனுபவிக்க வேண்டி இருக்கும். ஆதலால் முடிந்த வரை ஏக்கங்களை தொலைத்து விடுவது நல்லது. ஏதாவது ஆறுதல் தேட நினைத்தால் அதை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் அழுது தீர்த்து கொட்டி ஆறுதலை தேடிக் கொள்வது நல்லது.
“ பொதுவாகவே மீள்தல் என்பது எளிதல்ல தான், ஆனால் அது இரண்டே விடயங்களை தான் தன்னுள் அடக்கி இருக்கிறது, ஒன்று கடந்து செல்லுதல், இன்னொன்று அமைதியை நிலை நாட்டுதல் இந்த இரண்டையும் செய்து விட்டால், செய்ய பழகி விட்டால் மீள்தல் கொஞ்சம் எளிது தான் “