தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் வெகுவாக அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் இளைஞர்கள் என்பதால் ஒரு பெற்றோராக தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
கள்ளு, கள்ளச்சாராயம், மது எனப்படி படியாக முன்னேறி தற்போது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் என வந்து நிற்கிறது. மதுவை விட மிக மிக கொடியவையாக கருதப்படுகிறது இந்த போதைப் பொருள்கள். சில வருடங்களாகவே தமிழகத்தில் இந்த போதைப் பொருள் பழக்கம் என்பது மிக மிக அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
பெரும்பாலும் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகுபவர்கள் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். அதில் பலரும் பள்ளிப்பருவ, கல்லூரி பருவ மாணவர்களாக இருக்கிறார்கள். பெண்களும் இதற்கு விதி விலக்கல்ல. நாகரீக சூழலும் ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்று விட குழந்தைகள் தனித்து விடப்படுகின்றனர். குழந்தைகள் தங்கள் பொழுது போக்கிற்காக செல்போனுக்கு அடிமையாகி இருந்த காலம் சற்றே மாறி தற்போது போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.
அதிலும் சில போதைக்கு அடிமையாகிய குழந்தைகள் பெற்றோர்களால் கண்டு பிடிக்கப்பட்டாலும் கூட, அவர்களை போதையில் இருந்து அந்த பெற்றோர்களால் மீட்க முடியாத நிலைக்கு சென்று விடுவதாக கூறுகின்றனர். நவ நாகரீக உலகத்தில் ஒரு குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க பெற்றோர்களை மட்டுமே சார்ந்தது தான். குறைந்த பட்சம் வாரத்திற்கு இரு நாட்களாவது உங்கள் குழந்தைகளோடு முழு நேரத்தை செலவிடுங்கள்.
குழந்தைகளை பொதுவெளியில் விளையாட பழக்குங்கள், ஏதாவது ஒரு விளையாட்டை சொல்லிக் கொடுங்கள், அமர்ந்து கதை பேசுங்கள், புத்தங்கள் வாசிக்க கற்றுக் கொடுங்கள், சுற்றுலா தலங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள், நல்ல நண்பர்களை சம்பாதிக்க கற்றுக் கொடுங்கள். சமூகத்துடன் சமூகமாய் ஒட்ட பழக கற்றுக் கொடுங்கள். புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வங்களை குழந்தைகளிடம் தூண்டி விடுங்கள்.
பொதுவாகவே ஒரு குழந்தை போதைக்கு அடிமையாகும் போது பெரும்பாலும் அதற்கான காரணம் அவர்களின் பெற்றோர்களாவே இருக்கின்றனர். ஒரு குழந்தையை சூழும் தனிமையும் பெற்றோர்களால் கட்டவிழ்த்து விடப்படுவதுவே ஒரு குழந்தை போதைக்கு சீக்கிரம் அடிமையாவதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு குழந்தையை சமுதாயத்தின் சிறந்த குடிமகனாக வளர்க்கும் உரிமை முழுக்க முழுக்க அந்த குழந்தையின் பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது.
” பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம், குழந்தை என்பது உங்கள் சொத்து மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் நாளைய சொத்து, அதை முறையாக பராமரிப்பது பெற்றோர்களின் கடமை, போதையை ஒழிப்பது அரசின் கடமை என்றால், அந்த போதைக்காக உங்கள் குழந்தையை தெருவில் நிற்க வைக்காமல் இருப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை, உணர்ந்து செயல்படுங்கள் “