தேர்தல் பத்திரத்தை சுற்றி ஏன் இவ்வளவு குளறுபடிகள்? தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு ஆதாயம்?
உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரமுறையை ரத்து செய்ததில் இருந்தே தேர்தல் பத்திரம் பேசுபொருளாகி வருகிறது. ஏன் அதனைச் சுற்றி இவ்வளவு குளறுபடிகள், இந்த தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு ஆதாயம் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
முதலாவதாக தேர்தல் பத்திரம் என்பது என்ன?
தேர்தல் பத்திரம் என்பது கடந்த ஜனவரி 2018-யின் போது ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கிகள் மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிகளுக்கு நிதியாக கொடுக்கலாம். இதில் கொடுப்பவர்களின் பெயரோ, வாங்குகின்ற கட்சியின் பெயரோ வெளிப்படைத் தன்மையற்றது.
கட்டுப்பாடுகள்
தேர்தல் பத்திரங்களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டும் தான். பொதுத்தேர்தலிலோ அல்லது சட்டசபை தேர்தலிலோ குறைந்தபட்சம் 1 சதவிகிதம் வாக்கு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதியுதவி பெற முடியும்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்குகளில் மட்டுமே கட்சிகள் நிதியுதவியை பெறவோ பயன்படுத்தவோ முடியும். இதில் கட்சிகள் தங்களுக்கு நன்கொடை கொடுத்த நன்கொடையாளர்களின் விவரங்களை அறியமுடியாது.
சரி தேர்தல் பத்திரத்தினால் என்ன தான் நன்மை?
தேர்தல் பத்திரத்தின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையிலும், காசோலைகளின் மூலமும் நடைபெறுவதால் முறைகேடுகள் தடுக்கப்படும்.
குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் வாக்குகளை பெறும் கட்சிகள் மற்றுமே நிதியுதவி பெற முடியும் என்பதால், அரசியல் கட்சிகள் என்ற பெயரில் மக்களிடம் நேரடியாக நிதியுதவி பெறும் லோக்கல் கட்சிகளிடம் பணம் சேர்வது தடுக்கப்படும்.
சரி, ஏன் தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் தடை செய்தது? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு குளறுபடிகள்?
தேர்தல் பத்திரம் முழுக்க முழுக்க ஆளும் கட்சிகளுக்கு நிதியுதவி பெற ஒரு மிகச்சிறந்த ஆதாயம் ஆகி விடுகிறது. அதாவது ஒரு நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் அரசிடம் இருந்து தேவைப்பட்டால், மறைமுகமாக தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதி கொடுத்து விட்டு ஆளும் அரசிடம் தனக்கு தேவையானதை கேட்டு நிறைவேற்றிக் கொள்கின்றன.
இதனால் பெரும் பெரும் கார்பரேட்களுக்கு அரசு முழுமையாக அடிமையாகி விடும் அபாயம் இருக்கிறது. இது போக ஆளும் அரசுகள் தங்களுக்கு நிதி தேவைப்படும் போதெல்லாம் கார்பரேட் நிறுவனங்கள், பெருமுதலாளிகளின் நிறுவனங்களின் மீது தங்கள் அதிகாரத்தை காட்டி, நிதிகளை மறைமுகமாக பெறும் அபாயமும் இருக்கிறது.
தேர்தல் பத்திரம் ரத்து
இதையெல்லாம் காரணம் காட்டியே உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர முறையை முழுமையாக ரத்து செய்தது, அது மட்டும் அல்லாமல் யார் யார் எவ்வளவு பெற்றார்கள், எந்தெந்த நிதி நிறுவனங்கள் எவ்வளவு நன் கொடை பெற்றது எந்த தகவல்களையும் தர எஸ் பி ஐ வங்கிக்கு கடுமையாக உத்தரவு இட்டது. ஒரு பக்கம் எஸ்பி ஐ என்ன செய்வதென்று தெரியாமல் திணற, இன்னொரு பக்கம் ஆதாயம் அடைந்த கட்சிகள் விழி பிதுங்கி நிற்க கடைசியாக உச்சநீதிமன்றம் தான் கொடுத்த தீர்ப்பின் கீழ் வலுமையாக நின்றது. கடைசியாக குறிப்பிட்ட சில தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி ஒப்படைத்தது.
உச்சநீதிமன்றம் சந்தேகப்பட்டது போலவே ஒட்டு மொத்தமாக தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற கட்சிகளுள் கிட்ட தட்ட 48 % சதவிகிதம் ஆளும் ஒன்றிய அரசை சார்ந்த கட்சியையே சென்றடைந்து இருப்பது அம்பலம் ஆகி இருக்கிறது, இது போக ஒரு சில மாநிலத்தில் பெரும்பான்மை கொண்ட ஆளும் கட்சிகளும் கோடிகளில் நிதி வாங்கி இருப்பது வெளிக்கொணரப்பட்டு இருக்கிறது.
முடிவாக,
“ தேர்தல் பத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜனவாதிகள் ஆதாயம் அடைவதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட திட்டம் போலவே இருக்கிறது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த ரத்து பொது ஜனமக்களால் வரவேற்கப்படுவதாகவே கருதப்படுகிறது “