எங்க வீட்டு பிள்ளை | Re-View | ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்’
விஜயா புரொடக்சன்ஸ் நாகி ரெட்டி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சாணக்யா அவர்களின் இயக்கத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நம்பியார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 1965 ஆம் ஆண்டில் வெளியாகி அந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ’எங்க வீட்டு விள்ளை’ திரைப்படம் குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம்.
நடிகர் எம்.ஜி. ஆர் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த இரண்டாவது படம் இது. பூஞ்சோலை ஜமீனின் வாரிசாக ராமு, மிகவும் கோழை, சின்ன சின்ன விடயத்திற்கே மிகவும் பயப்படுபவர். தனது அக்காவின் கணவரான கஜேந்திரனுக்கு (நம்பியார்) அடிபணிந்து அந்த வீட்டில் எலி போல வாழ்பவர். ராமு கோழை என்பதால் ஜமீனின் சொத்துக்களை எல்லாம் கஜேந்திரனை கவனித்து வருகிறார். அதே சமயத்தில் ராமுவிற்கும் சொத்து குறித்து எந்த விவரமும் தெரியாமலும் பார்த்துக் கொள்கிறார். அது போக ஜமீனின் உண்மையான வாரிசான ராமுவிடம் இருந்து ஒட்டு மொத்த சொத்துக்களையும் தான் அபகரிக்க நினைக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் இளங்கோவாக இன்னொரு எம் ஜி ஆர். மிகவும் வீரம், தீரம் புரிபவர், பொது அறிவு மிக்கவர். வேலை இல்லாமல் பல குறும்புகளை வீட்டிலும் வெளியிலும் புரிந்து வருபவர். வெளியில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகளை இழுத்து வருவதால் இளங்கோவின் அம்மா அவரை வீட்டில் அடைக்கிறார். பின்னர் ஒரு சில பொய்களை சொல்லி வீட்டில் இருந்தும் அம்மாவின் கிடுக்கு பிடியில் இருந்து தப்புகிறார் இளங்கோ. அதே சமயத்தில் ராமு கஜேந்திரனின் அடக்குமுறை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் இடம் மாறுகிறார்கள். அதாவது ராமு இடத்திற்கு இளங்கோ செல்கிறார். இளங்கோ இடத்திற்கு ராமு செல்கிறார். அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான் மீதி கதைக்களம்.
நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இரண்டு கதாபாத்திரத்திற்கும் தனது நடிப்பை வெகுவாகவே வித்தியாசப்படுத்தி இருப்பார். கோழையான ராமுவாக, எலி போல பணியும் எம் ஜி ஆர், அதே சமயத்தில் வீரமான இளங்கோவாக, புலி போல பாயவும் செய்வார். இளங்கோ ராமுவின் இடத்திற்கு சென்று அங்கு நடக்கும் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் அந்த காட்சி தான் படத்தின் உச்சம். இசை காம்போவான விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களின் இசை, படத்திற்கு ஆகச்சிறந்த பலம். படத்தின் உச்சக்கட்ட காட்சி ஒன்றில் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் நடிகர் எம் ஜி ஆர் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கே அஸ்திவாரம் போட்டதென்று சொல்லலாம்.
“ ஒரு மசாலா படத்திற்கு என்ன என்ன தேவையோ, அதை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் சாணக்யா, இது போக நடிகர் எம் ஜி ஆர் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற பட்டம் வாங்கி தந்த முதல் திரைப்படம் இது தான். ஒவ்வொரு எம் ஜி ஆர் ரசிகர்களுக்கும் இப்படம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது “