IPL 2024 | ‘தொடர்ந்து இரு தோல்விகள், என்ன ஆயிற்று சென்னை அணிக்கு?’
ஐபிஎல் 2024 சீசனில் தொடர்ந்து இரு தோல்விகளை அடைந்து சென்னை அணி, ரசிகர்களை சற்றே ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஐபிஎல் 2024 சீசனை தொடர் இரு வெற்றிகளுடன் பாசிட்டிவாக துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது இரண்டு தொடர் தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது. ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி வலுவான ஒரு அணியை தன் பக்கம் கொண்டு இருந்தாலும் கூட, செய்கின்ற சின்ன சின்ன தவறுகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விடுகிறது.
என்ன ஆயிற்று சென்னை அணிக்கு?
பொதுவாக சென்னை அணியின் பலமே பவர் பிளேவில் ஒரு நல்ல துவக்கம், மிடில் ஆர்டரில் அதிரடி, களத்திற்கு ஏற்றார் போல ஒரு நல்ல டார்கெட்டை அடைதல், அதற்கு பின் முதல் 6 ஓவருக்குள் எதிரணியின் ஒரிரு விக்கெட்டுக்களை சரித்தல், மிடில் ஆர்டரில் ரன்களை கட்டுப்படுத்துதல், இறுதியில் வெற்றியை நோக்கி பயணித்தல் இதுவே சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பல ஆண்டுகால திட்ட வடிவமாக இருக்கிறது.
ஆனால் தற்போது சென்னை அணி இதில் சில விடயங்களை களத்தில் விட்டுக் கொடுத்துவிடுவதால், அணியின் வெற்றி வாய்ப்பு அப்படியே எதிரணியினருக்கு உரித்தாகி விடுகிறது. உதாரணத்திற்கு கடைசியாக தோற்ற இரண்டு போட்டிகளிலுமே சென்னை அணி பவர்பிளேவை மேக்சிமம் ஆக்க தவறி விட்டது. இது போக ருதுராஜ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சென்னை அணிக்கு எப்போதுமே ஒரு நல்ல துவக்கம் கொடுக்கும் வீரர் சொதப்பி விடும் போது முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஆகி விடுகிறது.
சரி, இனி சென்னை என்ன செய்ய வேண்டும்
ரஹானேவை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கலாம், ஒரு நல்ல அதிரடி துவக்கத்தை கொடுப்பார். டேரி மிட்செல் இடத்தில் மொயீன் அலியை இறக்கி விடலாம், அதிரடியும் காட்டுவார், அதே சமயத்தில் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் எடுத்துக் கொடுக்கிற ஒரு எக்ஸ்ட்ரா பவுலிங் வாய்ப்பும் கிடைக்கும், டாட்ஸ் ஆடுவதை குறைக்கலாம், ஒரு ரன்கள், இரு ரன்களாக ஓடி எடுப்பதில் சென்னை அணி தயக்கம் காட்டுகிறது. நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக எல்லாம் டாட்ஸ் 40 களை நெருங்கி விட்டது. அதில் ஓடி ரன்கள் எடுத்து இருந்தால் எதிர் அணிக்கு ஒரு ஸ்கோர் பிரஸ்சர் இருந்து இருக்கலாம்.
“ நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை அணிக்கு களத்தில் ஒரு சில மாற்றங்கள் தேவை, அணியைப் பொறுத்தவரை பலம் வாய்ந்த அணி தான், சம நிலையான அணி தான், டாஸ், பவுலிங் ரொட்டேசன், பேட்டிங் ஆர்டரை சிறந்த முறையில் தெரிவு செய்தல் ஆகியவற்றை சென்னை அணி கவனத்தில் கொண்டால் கோப்பைய நோக்கி மீண்டும் பயணிக்கலாம் “