படையப்பா | Re-View | ‘இது மாறி ஒரு மாஸ் படத்த காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் ரா’
அருணாச்சலம் சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா மற்றும் பலரின் நடிப்பில், 1999 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் படையப்பா.
கதைக்கரு
முதல் பாதியில் ஒரு சொத்தை மையப்படுத்தி ராமலிங்கம் (மணிவண்ணன்) வெர்சஸ் ஆறுபடையப்பன் (ரஜினிகாந்த்) என நகரும் கதை, இரண்டாம் பாதியில் தன் காதலை ஏற்க மறுத்து விட்டு, தன் வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரி வசுந்தரா (சவுந்தர்யா) வை திருமணம் செய்து கொண்ட ஆறுபடையப்பன் வெர்சஸ் நீலாம்பரியாக (ரம்யா கிருஷ்ணன்) நகர்கிறது.
ரீ-வியூ
’சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்ற பாட்டுடன் ஆரம்பிக்கும் கதை, அதற்கடுத்து நகரும் வேகமும், ரஜினி அவர்களின் மாஸ்சும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ட்ரீட் தான். சிவாஜி – ரஜினி காம்போ சில மணித்துளிகள் வந்தாலும் கூட படத்தின் அழுத்தம் என்பது அங்கு தான் இருக்கும். சொத்து அனைத்தையும் இழந்து விட்டு, குடிசையில் வந்து குடும்பத்துடன் தங்கி இருக்கும் ரஜினி, சாப்பாட்டை தங்கைக்கு ஊட்டி விட்டு, அவரின் தங்கையிடம் கல்யாணம் குறித்து கண்கலங்கி பேசும் சீனில் ரஜினிகாந்த் எமோசனலாக ஸ்கோர் செய்து இருப்பார்.
நீலாம்பரி வெர்சஸ் ஆறுபடையப்பன் இருவரும் சந்திக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் மாஸ் அனல் பறக்கும். நடிகர் ரஜினி அவர்களுக்கு இணையான மாஸ்சை ரம்யா கிருஷ்ணன் அவர்களும் நெகட்டிவ் சைடில் கொடுத்து இருப்பார். அதுவே இந்த படத்தின் ஆகச்சிறந்த ப்ளஸ் என்று சொல்லலாம். ஒரு சீனில் ஆறுபடையப்பன், நீலாம்பரி அவர்களை சந்திக்க நேரில் வருவார். வீட்டில் உள்ள அத்துனை சேர்களையும் எடுத்து மறைத்து வைக்க சொல்லி விட்டு நீலாம்பரி மட்டும் ஸ்டைலாக, கால் மேல் கால் போட்டு ஆறுபடையப்பன் முன்பு கெத்தாக உட்கார்ந்து இருப்பார்.
ரஜினி ஒரு சிறு புன்னகையுடன், கையில் இருக்கும் துண்டை சுழட்டி மேலே கட்டப்பட்டு இருக்கும் ஊஞ்சலை இழுத்துப் போட்டு ஸ்டைலாக உட்காருவார். இதற்கிடையில் ஏ ஆர் ரஹ்மான் ஒரு பிஜிஎம் அந்த சீனுக்கு போட்டு இருப்பார். ஏற்கனவே அந்த சீனுக்கு இருக்கும் மாஸ்சை, அந்த பி ஜி எம், இன்னும் அந்தர் மாஸ் சீன் ஆக காட்டும், அந்த ஒரு சீனுக்கே ஒட்டு மொத்த டிக்கெட் விலையை கொடுக்கலாம் அப்படி இருக்கும் அந்த சீன். கிட்ட தட்ட தமிழகம் முழுக்க நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம், இந்த ஒரு படத்தை தியேட்டரில் 50 தடவைக்கும் மேல் பார்த்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரைப்படமாக படையப்பா அமைந்தது!
“ இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அன்று படையப்பாவில் காட்டிய அந்த ஸ்டைலான ரஜினி அவர்களை யாராலும், எந்த இயக்குநராலும் இன்றளவும் திரையில் கொண்டு வரமுடியவில்லை, அது அவர் மீண்டும் ரஜினி அவர்களுக்கு இயக்குநர் ஆனாலே சாத்தியம் ஆகும் “