உலககோப்பையின் முதல் அப்செட், பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!
இந்த டி20 உலக கோப்பையின் முதல் அப்செட்டாக, பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தி இருக்கிறது அமெரிக்கா.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அமெரிக்க பவுலர்கள் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தினர். அதற்கு பின் ஆடிய அமெரிக்கா முதல் விக்கெட்டை சீக்கிரம் இழந்தாலும் கூட கேப்டன் மோனாங் படேலும், கவுஸ்சும் பொறுமையாக விளையாடி இலக்கை நோக்கி அணியை இழுத்துச் சென்றனர்.
கேப்டன் மோனாங் படேல் 50(38) மற்றும் கவுஸ் 35(26) ரன்களில் ஆட்டம் இழக்க, போட்டி கடைசி ஓவர் திரில்லரை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹரிஷ் ரஃப் வீசிய முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே, அவ்வளவு தான் வெற்றி பாகிஸ்தான் பக்கம் தான் என்று நினைக்கும் போது ஆரோன் ஜோன்ஸ்சின் சிக்ஸர், நிதிஷ் குமாரின் பவுண்டரியுடன் அமெரிக்கா இலக்கை சமன் செய்தது.
அதற்கு அடுத்ததாக சூப்பர் ஓவர், முதலில் ஆடிய அமெரிக்கா பாகிஸ்தானின் நட்சத்திர பவுலரான அமீரை எதிர்கொண்டது. ஒரே ஒரு பவுண்டரி தான் என்றாலும் கூட, ரன்னிங் பெட்வின் த விக்கெட்ஸ்சில் சிறப்பாக செயல்பட்டு ஒரு ஓவருக்கு 18 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தானால் ஒரு விக்கெட் இழப்பிற்கு பதின்மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக அமெரிக்கா வெற்றி பெற்று குரூப் A பிரிவில் இரண்டு வெற்றிகளுடன் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.
பாகிஸ்தானை பொறுத்தவரை இந்த போட்டியை ரொம்ப ரொம்ப அசால்ட்டாக எடுத்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சர்வதேச உலககோப்பை லீக் போட்டி விளையாடுகிறோம் என்று இல்லாமல், அமெரிக்கா தானே என்ற மெத்தனம் தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம். தொடர்ந்து இதே மெத்தனத்துடன் விளையாடினால் லீக் போட்டியிலேயே பாகிஸ்தான் வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது.
“ அமெரிக்காவும் ஒரு அணியாக சிறப்பாக விளையாடியது என்றே சொல்ல வேண்டும், இதை அப்செட் என்று சொல்லாமல், அமெரிக்கா ஒரு அணியாக சிறப்பாக விளையாடியது என்று சொல்வதே சரியாக அமையும் “