தொடர்ந்து ஏழு நாட்களாக கீரிஸ் நாட்டில் எரியும் காட்டு தீ
கீரிஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தீவான ஈவியாவில் உள்ள பிரிஸ்டின் காட்டில் தொடர்ந்து ஏழாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏராளமான நிலப்பகுதிகளையும் வீடுகளையும் விழுங்கிய காட்டுத்தீ காட்டில் உலவி வரும் உயிரினங்களையும் அழித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகிறது கீரிஸ் அரசு.
தொடர்ந்து தட்ப வெப்ப நிலை மாறி வரும் கீரிஸ் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 45 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை நிலவி வருகிறது.கடந்த ஒருவாரத்தில் மட்டும் 12 இடங்களுக்கு மேல் காட்டுத்தீ பதிவாகி இருப்பதாக அந்நாட்டு வனவியல் துறை அறிக்கை விடுத்துள்ளது. கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் காட்டுத்தீயால் வெளிவரும் புகை மற்ற நகரங்களுக்கும் பரவி வருவதால் காற்று மாசுபாடும் பெருமளவில் நிலவி வருகிறது. தொடர்ந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அரசு, ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு வாகனங்கள்,ரசாயன தெளிப்பு என்று பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்ற போதும் எதுவும் பயனளிக்கவில்லை.
“ மனிதன் இயற்கையை மதிக்கவில்லை, இயற்கை இந்த மனித இனத்திற்கு சாபம் இட்டது, அந்த சாபத்தின் விளைவு தான் இவை. இயற்கை கொடுத்த இந்த சாபத்தை இயற்கையே மீண்டும் எடுத்தால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும் “