டெல்டா பிளஸ் கொரோனோ தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் 5 பேர் பலி
மஹாராஷ்டிரத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் மட்டும் 5 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இதில் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் டெல்டா பிளஸ் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜூலை 21 அன்று டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்த போதும் டெல்டா வகை கொரோனோவால் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 63 வயதான அந்த மூதாட்டி அவசர சிகிச்சைபிரிவில் இருந்த நிலையில் கடந்த ஜூலை 27 அன்று தொற்று முற்றி பலியானார்.
“ இரண்டு தவணையாக தடுப்பூசி தான் செலுத்திக்கொண்டு விட்டோமே என்று மெத்தனத்தில் கொரோனோ பயமின்றி கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றாதீர்கள். அக்கிருமி உங்கள் உயிரை மட்டும் ஆட்கொள்ளப்போவதில்லை உங்களால் இன்னும் சிலரை… ஆதலால் சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம் ”