50 வருடங்களுக்கு பின் ஓவல் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி!
இந்தியா – இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நான்காவது நாளில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து இந்திய அணியிடம் வீழ்ந்தது.
கடைசியாக 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதற்கு பின் 50 வருடங்களுக்கு பிறகு கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் டெஸ்ட்டில் தங்களது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இருந்தது. கோஹ்லி, ஸ்ரதுல் அரை சதம் அடித்திருந்த போதும் மீதி அனைத்து நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்து இருந்தனர். அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 99 ரன்கள் அதிகம் எடுத்து முன்னிலை வகித்தது.
இரண்டாவது இன்னிங்சில் பொறுமையுடன் ஆடிய இந்திய அணியினர் வரிந்து கட்டி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். ரோஹிட் 127, புஜாரா 61, ரிஷப் பேண்ட் 50, ஸ்ரதுல் 60 என்று அனைவரும் இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்ய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையாக ஆடிய போதும் அடுத்து அடுத்து ஆடியவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறி அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, ஜடேஜா மற்றும் ஸ்ரதுல் தாகூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
“ மூன்றாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து மிகவும் காயப்பட்டிருந்த இந்திய அணி, நான்காவது டெஸ்ட் நடந்த ஓவல் மைதானத்தில், தனக்கிருந்த மோசமான புள்ளி விவரங்களையும் கடந்து, இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து 50 வருடங்களுக்கு பிறகு அந்த மைதானத்தில் தங்களது வெற்றியை ருசித்திருக்கிறது “