நீட் தேர்வினால் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் மற்றுமொரு தற்கொலை!
சேலம் மாவட்டம் மேட்டுரைச் சேர்ந்த விவசாயியின் மகன் தனுஷ் என்பவர் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளது அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூளையூர் என்னும் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தான் இந்த தனுஷ் என்பவர். தனது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளார். தொடர்ந்து நீட் தேர்வுக்கு படித்து வந்த போதும் இன்று நடக்க இருக்கும் நீட் தேர்விலும் தோல்வியைத் தழுவிவிட்டால் தனது மருத்துவ கனவு தூள் தூளாகிப்போகுமே என்னும் பயமே அவரைத் தற்கொலைக்கு தூண்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இரவு வரை நீட் தேர்வுக்கு படித்து வந்த தனுஷ், தனக்குள் இருந்த நீட் குறித்த பயம் காரணமாக வீட்டில் அனைவரும் தூங்கியதற்கு பின் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி, மூன்றாவது முறையும் தோல்வியுற்றால் தனது மருத்துவ கனவு பொய்த்து விடுமோ என்னும் பயம் அவரை இந்த நிலைக்கு ஆழ்த்தியதாக அவரது நண்பர்கள் கூறி வருகின்றனர்.
“ ஒரு மாணவனின் அதீத கனவுகளை, சுற்றி இருக்கும் அத்துனை பேரும் புடுங்கி, அவனை கேளிக்கை மனிதனாய் பார்க்கும் போது, இருக்கும் வலி அவன் அனுபவிக்கும் வலி மரணத்தை விட கொடியது. தேர்வு தான் ஒரு மனிதனின் சுய அறிவை தீர்மானிக்கும் என்றால் இன்னும் இந்த நீட் பல பேரை கொல்ல தான் செய்யும் என்பதில் விதிவிலக்கல்ல “