பகுத்தறிவுக் கிழவனுக்கு இன்றோடு வயது 143!
பெரியார் எனப்படும் பகுத்தறிவு கிழவனின் 143-ஆவது பிறந்த நாள் இன்று. சாதியக் கொடுமைகள், மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் என்று தேசம் முழுக்க பரவிக் கிடந்த வேறுபாடுகளுக்கு எல்லாம் தன் கைத்தடி கொண்டு பாடம் புகட்டியவர். சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர். எந்த எதிர்ச்சொல்லிற்கும் அடங்கிப்போகாத குணமுடையவர் மாண்புடையவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெண்களுக்கு சம உரிமை கேட்டு களத்தில் நின்றவர். மூட நம்பிக்கைகளை வேரறுத்தவர். சாதியிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தன் குரலை முன் வைத்தவர். சுயமரியாதையை விட்டிக் கொடுக்காதவர். நேர்பட பேசுபவர். பகுத்தறிவு மிக்கவர் என்று இந்த கிழவனை பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு இந்த பெயர் ஏற்படுத்திய தாக்கம் தமிழகத்தில் மிக மிக அதிகம்.
அடக்கு ஒடுக்கு முறைகளை பற்றி பெரியார் ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார். அதில் “ ஒரு பெரிய நாடு, சிறிய நாட்டினை அடக்கி ஒடுக்க நினைத்தால் நான் அந்த சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதக்குழு, சிறிய மதக்குழுவினை அடக்கி ஒடுக்க நினைத்தால் நான் அந்த சிறிய மதக்குழுவின் பக்கம் நிற்பேன், அந்த சிறிய மதக்குழுவில் இருக்கும் ஒரு பெரிய சாதிப்பிரிவு, இன்னொரு சிறிய சாதிப்பிரிவை அடக்கி ஒடுக்க நினைத்தால் நான் அந்த சிறிய சாதிப்பிரிவின் பக்கம் நிற்பேன். அந்த சிறிய சாதிப்பிரிவின் கீழ் இருக்கும் ஒரு முதலாளி, அவனின் தொழிலாளியை அடக்கி ஒடுக்க நினைத்தால் நான் அந்த தொழிலாளியின் பக்கம் நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளி அவன் மனைவி அவனுக்கு கீழ் இருப்பதாக நினைத்து அப்பெண்ணை அடக்கி ஒடுக்க நினைத்தால் நான் அந்த பெண்ணின் பக்கம் நிற்பேன். ஒட்டு மொத்தமாக இந்த சமுதாயத்திற்குள் எழுந்து நிற்கும் அடக்கு ஒடுக்கு முறைகளே என் எதிரி “ என்று அடக்கு ஒடுக்கு முறைகள் குறித்து ஆவேசமாக முன் மொழிந்தவர் தந்தை பெரியார்.
“ அக்கிழவனின் உயிருக்கு தான் இங்கு ’அவுட்’. ஆனால் அந்த பகுத்தறிவு கிழவனின் நிலைத்து நிற்கும் பெயருக்கு என்றும் தமிழகத்தில் நாட் அவுட், ஆக மொத்தத்தில் பெரியார் – 143* “