மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளாரா ராகுல் காந்தி!
கடந்த 2019-இல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி மறுபடியும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் ராகுல் காந்தி. அவர் பொறுப்பேற்றதற்கு பின் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி இருந்த ராகுலை மறுபடியும் தலைவர் ஆக்க முயற்சிக்கின்றனர் மூத்த தலைவர்கள்.
ராகுல் காந்தி பதவி விலகியதற்கு பின், சோனியா காந்தி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் முழுநீள தலைவர் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளாததாலும், ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு கட்சிக்குள் தொடர்ந்து குளறுபடிகள் நீடிப்பதாலும், மூத்த தலைவர்கள் முழு நீள தலைமை வேண்டும் என நினைப்பதாக தெரிகிறது.
அதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உட்பட 23 பேர், கட்சிக்கு முழு நீள தலைவராக ராகுல் காந்தியே மறுபடியும் செயல்பட கோரி சோனியா காந்தியிடம் மனு அளித்துள்ளனர். இவ்வளவு நாள் பொறுப்பினை ஏற்க மறுத்து வந்த ராகுல் காந்தியும், தற்போது மூத்த தலைவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிகிறது.
“ ஆகவே விரைவில் நடக்க இருக்கும் தலைமை தேர்ந்தெடுப்பில், மீண்டும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முழுநீள தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறியப்படுகிறது “