தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ மழை பதிவு!
நேற்றைய தினத்தில் (29-10-2021) தமிழகத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி இருக்கிறது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ, கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையில் 17 செ.மீ மழையும் பதிவாகி இருக்கிறது.
ஒவ்வொரு மழையிலும் அணை நிரம்புகிறது. தாமிரபரணி நீர் திருவைகுண்டம் தடுப்பு அணையைத் தாண்டி ஓடி கடலுக்குள் சென்று வீணாக கலக்கிறது. தென் மாவட்டங்களில் இன்று பல ஊர்கள் நன்னீரை விலை கொடுத்து தான் வாங்கும் நிலை இருந்து கொண்டு இருக்கிறது. ஆதலால் பொருநை நதியின் கடைசி தடுப்பான திருவைகுண்டத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்தி அணையை விரிவாக்கினால், அதன் மூலம் பல ஊர்கள் பயன்பெறும் என்பது அங்கிருப்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
நன்னீர் மேலாண்மை என்பது ஒரு நாடு செழிக்க மிகவும் அவசியம், அந்த மேலாண்மை தமிழகத்தில் இல்லாத காரணத்தினால் தான் ஒவ்வொரு வறண்ட சூழலிலும் பிற மாநிலங்களிடம் நம் மாநிலம் கெஞ்சும் சூழல் நிலவி வருகிறது. புதியதாக எந்த மேலாண்மையையும் உருவாக்க கூட வேண்டாம் இருப்பதை மேம்படுத்தினால் கூட நம் மாநிலம் நன்னீர் மேலாண்மையில் நன்றாகவே மேம்படும்.
“ அந்த வகையில் தாமிரபரணி தடுப்பு அணையை மேம்படுத்தினால் தென் மாவட்டங்களைச் சுற்றி உள்ள பல ஊர்களில் இருக்கும் நன்னீர் பிரச்சினை தீரும் என்பது பொருநை கரையோர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை “