தோற்பதற்கு 99% வாய்ப்புகள் இருக்கும், ஆனால் மிச்சமிருக்கும் அந்த 1 சதவிகிதத்திலும் வெற்றியைத் தேடி தருபவன் தான் தலைவன் தோனி!

Write Up About The All Time Great Indian Team Captain Mahendra Singh Dhoni

Write Up About The All Time Great Indian Team Captain Mahendra Singh Dhoni

இந்திய அணிக்காக மூன்று ஐசிசி ட்ராபிகளை தலைவனாக வாங்கிக் கொடுத்து விட்டு ஒரு தலைமை விடைபெற்று சென்றது. அதுவே மகேந்திர சிங் தோனி.

அரசன் கேள்விப்பட்டு இருப்பீர்கள், போரின் போது தன் படைத்தளபதிகளை நோக்கி வருகின்ற எதிரிகளின் அம்புகளை எல்லாம், அவன் முன்னால் நின்று வாங்கிக் கொள்வான். ஆனால் அதே போரில் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை படையிடம் ஒப்படைத்து விட்டு ஒரு ஓரமாய் நின்று கொண்டு அந்த வெற்றியை கொண்டாடுவான். கிட்டதட்ட அப்படிப்பட்ட ஒரு அரசன் தான் தோனி. விமர்சனங்களை எல்லாம் தான் வாங்கி கொண்டு வெற்றிகளை எல்லாம் அணியிடம் ஒப்படைத்து விடுவார்.

எத்தனையோ வெற்றிகள், எத்தனையோ மறக்க முடியாத தருணங்கள், ஹெலிகாப்டர் சாட் சிக்ஸ்சர்கள், கடைசி பால் வெற்றிகள் என்று தோனி கொடுத்து சென்ற நினைவுகள் எல்லாம் காலங்கள் கடந்தும் நெஞ்சுக்குள் இருக்கும். தோற்பதற்கு அங்கு 99 சதவிகிதம் வாய்ப்புகள் இருக்கும். ஆனால் அந்த மிச்சமிருக்கும் 1 சதவிகிதத்திலும் அணிக்கு வெற்றியைத் தேடி தரும் தலைமை தான் மகேந்திர சிங் தோனி.

1983 கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலககோப்பையை வென்று இருந்தது. அதற்கு பின் 1987,1992,1996,1999,2003,2007 என்று ஆறு உலககோப்பை போட்டிகளை வெவ்வேறு தலை சிறந்த தலைமைகளுடன் இந்திய அணி சந்தித்த போதும் கூட அதில் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் உலககோப்பையை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தனர் நம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

2011 உலககோப்பை, இந்த முறை தோனி தலைமையில் களம் இறங்குகிறது இந்திய அணி. இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது இந்தியா. முதலில் பேட் செய்த இலங்கை அணி இந்தியாவிற்கு 274 ரன்கள் இலக்கு வைத்தது. சேவாக் 0(2), சச்சின் 18(14) என்ற இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்கள் சீக்கிரமே தகர்ந்த போது அங்கு இந்திய ரசிகர்களின் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்தது. ஆனால் காம்பீரும் தோனியும் மட்டும் ஒரு பக்கம் உலக கோப்பை கனவுக்கோட்டையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டிக் கொண்டு இருந்தனர்.

97(122) ரன்களில் காம்பிரும் சரிந்து விடவே, இன்னொரு பக்கம் அந்த கனவுக் கோட்டையை எழுப்பும் பொறுப்பு தோனியின் மேல் மொத்தமாய் விழுந்தது. பொறுப்பாக பொறுமையாக, அதிரடி காட்டும் நேரத்தில் அதிரடியாக என்று அந்த கனவுக் கோட்டையக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி அதில் இந்தியக் கொடியையும் நாட்டினார் மகேந்திர சிங் தோனி. “Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years!” என்ற கமென்ட்ரியுடன் தோனியின் அந்த கடைசி சிக்ஸ்சை இன்று பார்த்தாலும் புல்லரிக்கும்.

“ தலை சிறந்த பேட்ஸ்மேனாக எத்தனையோ பேர் அணியில் இருக்கலாம், தலை சிறந்த பவுலர்களும் எத்தனையோ பேர் அணியில் இருக்கலாம். ஆனால் தலைமை என்பது எப்போதும் வேறு ஒரு ரகம். அந்த ரகத்தில் சிறந்த ரகம் தான் மகேந்திர சிங் தோனி “

About Author