நாடக கலைஞனில் இருந்து கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகன், எம் எஸ் பாஸ்கர் என்னும் நடிகன் கடந்து வந்த பாதை!
நாடக கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகர், காமெடி நடிகன் என இந்த சினிமா வாழ்க்கையில் பல படிகளை பல்வேறு காலக்கட்டங்களில் கடந்து தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து இருப்பவர் தான் எம் எஸ் பாஸ்கர்.
பட்டுக்கோட்டையில் பிறந்த எம் எஸ் பாஸ்கரின் முழுப்பெயர் முத்துப்பேட்டை சோமு பாஸ்கர். இன்று இவர் அனைவருக்கும் தெரிந்த ஒரு முகமாக இருக்கலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் இவரது உழைப்பு என்பது அளாவதியானது, முதலில் நாடக கலைஞர், அதில் வரும் வருமானம் பத்தாமல் எல் ஐ சி ஏஜெண்ட், பின்னர் சிறிது காலம் டூத் பேஸ்ட் கம்பெனியில் வேலை என சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் இவர் சின்ன சின்னதாய் பல வேலைகளை பார்த்து வந்தார்.
பின்னர் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டர் வருகிறது. அதற்கு பின்னர் பெரிதாய் வாய்ப்புகள் இல்லாமல் கொஞ்ச நாட்களுக்கு சீரியல், பின்னர் அதிலும் வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு படங்களை தமிழில் மொழியில் பெயர்க்கும் குழுக்களுள் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட், அதற்கு பின்னர் கொஞ்ச நாட்களுக்கு காமெடியன், பல படங்களில் காமெடியனாக நடித்த பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்கள் வருகிறது.
எம் எஸ் பாஸ்கர் என்னும் கலைஞனின் பல வருடப் பசிக்கு ஏதோ தீனி கிடைத்தது போல தனக்கு கிடைத்த சிறு சிறு குணச்சித்திர வேடங்களை கூட பெரும் உழைப்பைக் கொடுத்து நடிக்கிறார். அதற்கு பின்னர் வாய்ப்புகள் குவிகிறது, படிப்படியாக தன் நிலையை உயர்த்தி தனக்கான அடையாளங்களை மாற்றி தற்போது தவிர்க்க முடியாத மாபெரும் நடிகன் என்னும் இடத்தை எம் எஸ் பாஸ்கர் கோலிவுட்டில் அடைந்து இருக்கிறார். ’என்ன கேரக்டர் வேணாலும் கொடுங்க நான் அதாவே மாறிக் காட்டுறேன்’ என்பது தான் எம் எஸ் பாஸ்கர் என்னும் கலைஞனின் ஆகச்சிறந்த திறமை.
“ ரஜினிகாந்த் அவர்கள் நடிகனாக உருவெடுத்த காலத்திலிருந்தே எம் எஸ் பாஸ்கர் என்னும் கலைஞனும் வாய்ப்புகள் தேடிக் கொண்டு இருந்திருக்கிறான், ஒரு வேளை அப்போதே அவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்து இருந்தால் இந்நேரம் ரஜினி, கமல் போல அவரும் ஹீரோவாக இருந்திருக்க கூடும் என்பதில் ஐயமில்லை “