அழகையும், கவர்ச்சியையும் போற்றிய மனிதங்கள், சில்க் ஸ்மிதா என்னும் மனிதியை போற்ற மறந்து விட்டது!

People Admire Silk Smitha Beauty And Charm But Forgot To Admire Her Kindness Idamporul

People Admire Silk Smitha Beauty And Charm But Forgot To Admire Her Kindness Idamporul

நடிகை சில்க் ஸ்மிதாவின் அழகையும் கவர்ச்சியையும் போற்றிய இந்த மனிதங்கள், அவரை ஒரு ஆகச்சிறந்த மனிதியாக போற்ற தவறி விட்டது.

ஸ்மிதாவின் ஆரம்ப காலக்கட்டம்

பொதுவாகவே சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி நடிகை என்ற எண்ணம் தான் அனைவருக்கும் வரும். ஆனால் அவர் உண்மையில் ஒரு நல்ல மனிதி என்பது அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆந்திராவில் இருந்து கையில் ஒரு காசு கூட இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி சென்னை வந்து இறங்கிய விஜயலெட்சுமி தான் இன்றைய சில்க் ஸ்மிதா. ஆனால் தனது நடிப்பு திறமையை நிரூபிக்க வந்த ஸ்மிதாவை இந்த களம் ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றி விட்டது.

விரிவடைந்த சினிமா மார்க்கெட்

அவர் தமிழ் சினிமாவை விட கேரள சினிமாவை அதிகம் நேசிப்பாராம், காரணம் தமிழ் சினிமா பெரும்பாலும் அவரை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்கவே முற்பட்ட போது, கேரள சினிமா அவரது நடிப்பிற்கு வித்திடும் ஒரு சில கதைக் களத்தை கொடுத்ததாம். குறுகிய காலக்கட்டத்தில் 500 படங்களை நெருங்கிய சில்க் ஸ்மிதா அந்த காலக்கட்டத்தில் பிரபல நடிகர்களாக இருந்தவர்களை விட அதிக சம்பளம் பெற்றாராம். அந்த அளவிற்கு அவருக்கு மார்க்கெட்டும் விரிந்து இருந்தது.

நட்பு வட்டாரங்களே இல்லாத வாழ்க்கை

கவர்ச்சி நடிகை என்ற பெயர் வந்து விட்டதால், அனைவரும் அவரை தவறாகவே அணுகும் நிலை ஏற்பட்டது. அதனாலேயே பெரும்பாலும் தனது நட்பு வட்டாரங்களை மிகவும் சுருக்கி கொள்வாராம் சில்க் ஸ்மிதா. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அதிகமாக யாரிடமும் பேச மாட்டாராம், அதனால் திமிறு பிடித்தவர் என்ற பெயரும் அவருக்கு கொடுத்தது இந்த சினிமா வட்டாரம். அவர் சம்பாதித்த பணம் அவருக்கு ஒரு போதும் நிம்மதியை தந்ததில்லை என்றே கூறப்படுகிறது.

யாருக்குமறியமால் செய்த பல உதவிகள்

அவரைத் தேடி வந்து யாரேனும் உதவி என்று கேட்டால், அவர்களுக்கு என்ன தேவையோ அதை விட பன்மடங்கு செய்து கொடுக்கும் மனப்பாங்கு உடையவராம். அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறாராம். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த பலருக்கும் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறாராம். அவர் வாழ்க்கையில் இருந்த ஒரே நிம்மதி தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது தானாம்.

நிம்மதியில்லா வாழ்வு

படங்களில் சிரித்த முகத்துடன், கவிதை பேசும் விழிகளுடன் காட்சி அளிக்கும் சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையில் மகிழ்வுகள் என்பது மிக மிக குறைவு தானாம். வாழ்க்கை முழுக்க விரக்தியில் தான் வாழ்ந்து கழித்தாராம். தான் நடிகை ஆகவில்லை என்றால் நக்ஸலைட் ஆகி இருப்பேன் என்று கூட ஒரு பேட்டியில் கூறி இருப்பார். அதீத அரசியல் அறிவு மிக்கவர். பல பேட்டிகளில் அவர் பேசும் போது சமூகம் குறித்த, அப்படி ஒரு, தெளிவு அவரிடம் இருக்கும்.

அவர் தேடிய அன்பு அவருக்கு கிடைக்கவில்லை, அதீத பணம் இருந்த போதும் கூட அவர் தேடிய நிம்மதி என்பது அவரது வாழ்வில் ஒரு போதும் இருந்தது இல்லை, அளாவதிய திறமை இருந்த போதும் கூட, அதை வெளிப்படுத்த யாரும் அவருக்கு ஒரு சிறந்த களத்தைக் கொடுக்கவில்லை. இப்படி பல விரக்தியில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

“ சில்க் ஸ்மிதாவின் அழகு கவர்ச்சியை இன்னமும் கொண்டாடி தீர்க்கும் இந்த மனிதங்கள், அவரை சிறந்த மனிதியாகவும் ஏன் கொண்டாடி தீர்க்கவில்லை என்ற கேள்வி தான் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது

About Author