காமெடியனில் இருந்து ஹீரோ, நடிகர் சூரி அவர்கள் கடந்து வந்த பாதை!
காமெடியனாக இருந்து விட்டு ஹீரோ ஆகுவதெற்கெல்லாம் ஒரு பெரும் உழைப்பு வேண்டும், நடிகர் சூரி அந்த உழைப்பைக் கொடுத்தார் இன்று ஹீரோவாக நிற்கிறார்.
நடிகர் சூரியின் திரைப்பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதாக அமையவில்லை, கிட்ட தட்ட அவர் கடந்து வந்த பாதை எல்லாமே முட்கள் நிறைந்தது தான். ஆரம்ப காலக் கட்டங்களில் மதுரையின் திருவிழா மேடைகளில் தன் பாடும் திறனையும், நடிப்பு திறனையும் வெளிப்படுத்தி வந்த சூரிக்கு ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை வருகிறது.
சென்னை வருகிறார், வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை, லாரி க்ளீனர், எலக்ட்ரீசியன், பெயிண்ட் வேலை என சிறு சிறு வேலைகள் பார்த்து, தன் அப்போதைய தேவையை அதை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார். கடும் உழைப்பிற்கு பின்னர் ஒரு சில சீரியல்களிலும் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. ஆனாலும் கூட யாராலும் கவனிக்கப்படாதா ரோல்கள் தான்.
சங்கமம், நினைவிருக்கும் வரை என 90 ஸ்களில் வெளியான பெரும்பாலான படங்களில் யாராலும் கவனிக்கப்படாத ரோல்களில் நடிகர் சூரி நடித்து இருக்கிறார். ஆனாலும் அவருக்கு பெயர் பெற்று தந்த ஒரு திரைப்படம் என்றால் அது 2009 காலக்கட்டத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் தான். அதிலும் அவர் செய்த அந்த பரோட்டோ காமெடி, பொது ஜன மத்தியில் பிரபலமாகவே அதற்கு பின்னர் சூரி, பரோட்டோ சூரி என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.
அதற்கு பின்னர் நான் மகான் அல்ல, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல படங்களில் மக்களின் மனதை கவரும் காமெடியனாக வலம் வந்தாலும் கூட, ஒரு சாரர் இவரது காமெடியை கலாய்த்தும் வந்தனர். ’என்னடா இவரு எப்ப பார்த்தாலும் பொட்டட்டோ டொமட்டோனு’ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காருன்னு சமூக வலைதளங்கள் தொடர்ந்து சூரியை கலாய்த்து வந்தனர். அதற்கு பின்னர் இவருக்கு படங்களில் சரியான ரோல்களும் இல்லை.
அப்போது தான், அந்த சமயத்தில் தான் இயக்குநர் வெற்றிமாறனின் கண், நடிகர் சூரியின் மீது விழுகிறது. வெற்றிமாறன் நடிகர் சூரியிடம் ஒரு ஹீரோ இருப்பதை உணர்ந்து, விடுதலை என்னும் ஒரு பெரும்படைப்பை அவர் கையில் ஒப்படைக்கிறார்.
’என்னது வெற்றிமாறன் படத்துல சூரியா?, அதுவும் ஹீரோவாவா?’ என சமூக வலைதளங்கள் பல கேள்விகளை முன் வைத்து வந்தன.
இதனால் சற்றே தயங்கிய சூரி ஒரு கட்டத்திற்கு பின் ஒப்புக் கொள்கிறார். படம் வருடக்கணக்கில் உருவாகி ஒரு கட்டத்தில் வெளியாகிறது, திரையுலகமே விடுதலை சூரியை கண்டு வியக்கிறது, இப்படி ஒரு மாபெரும் நடிகனையா இத்துனை நாட்கள் நாம் காமெடியனாக பார்த்துக் கொண்டு இருந்தோம் என ஒவ்வொரு ரசிகனும், சூரியைக் கண்டு வியக்கிறான். நிச்சயம் இது ஒரு வாய்ப்பின் வெற்றி, அதிர்ஷ்டத்தின் வெற்றி என்று சொல்லி விட்டு கடந்து போய் விட முடியாது, இது சூரி என்னும் நடுத்தர மனிதனின் பல வருட உழைப்பின் வெற்றி. அதை அப்படித் தான் சொல்லி ஆக வேண்டும். அதை அப்படி சொன்னால் மட்டுமே சரியாகவும் இருக்கும்.
” வாழ்வின் பல ரணங்களுக்கு பின்னர் ஒரு ஹீரோ உருவாகி இருக்கிறான். இனியும் அந்த ஹீரோ ஹீரோவாகவே ரசிகர்கள் மத்தியில் வலம் வருவான் என்பதில் ஐயமில்லை, வாழ்த்துக்கள் சூரி அண்ணன் “