சத்தமில்லாமல் தமிழில் பல ஹிட்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இசையமைப்பாளர் பரத்வாஜ், தமிழில் பல ஹிட்களை சத்தமில்லாமல் கொடுத்து இருக்கிறார். அவரைப்பற்றிய ஒரு சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் திருநெல்வேலி மாவட்டம் ராவணசமுத்ரத்தை சார்ந்தவர். தெலுங்கு படங்களின் மூலம் தன் இசைப்பயணத்தை துவங்கியர், தமிழில் நடிகர் அஜித் அவர்களின் ’காதல் மன்னன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு அவர் அமைத்த இசை இன்றளவும் பெரிதாக பேசப்படுகிறது. அவர் அறிமுகமான அன்றைய காலக்கட்டத்தில் ஏ ஆர் ரஹ்மான் என்னும் பெரும்புயல் வீசிக் கொண்டு இருந்ததால் இவரது பெரிய பெரிய படைப்புகள் எல்லாம் பெயரற்று போனது.
காதல் மன்னன், அமர்க்களம், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, ஜே ஜே, ஆட்டோகிராப், அட்டகாசம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஐயா, வட்டாரம் என இவர் இசையமைத்த பல படங்களின் ஆல்பங்கள் மெகா ஹிட் என்றே சொல்லலாம். ஜெமினி, ஆட்டோகிராப் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற முறையில் தேசிய விருதும் இவர் பெற்று இருக்கிறார்.
இவர் பாடல்கள் பலவற்றை நாம் தினம் தினம் கேட்டு இருப்போம். ஆனால் இவர் தான் இசையமைத்தாரா என்று தெரியாத வண்ணம் இருந்திருப்போம். உதாரணத்திற்கு, ’காதல் மன்னன்’ திரைப்படத்தில் ’உன்னை பார்த்த பின்பு நான்’ , ’அமர்க்களம்’ திரைப்படத்தில் ‘சத்தம் இல்லாத தனிமையை கேட்டேன்’ , ‘பாண்டவர் பூமி’ திரைப்படத்தில் ‘அவரவர் வாழ்க்கையில்’, ’ஜே ஜே’ திரைப்படத்தில் ‘உனை நான் உனை நான்’, ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’, ’ஐயா’ திரைப்படத்தில் ‘ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம்’ என நிறைய நிறைய பாடல்கள் இருக்கிறது. சொல்லிக் கொண்டே போகலாம். படத்திற்கு படம் இசையில் நிறைய வித்தியாசம் காட்டி இருப்பார். படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இன்னுமே இவரை பல படங்களில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
“ இவர் இசையமைப்பில் ஈடுபட்டு இருந்த காலக்கட்டங்களில் வீசிக் கொண்டிருந்த புயல்கள் எல்லாம் அமைதிப் பெற்று இருந்தால் இவரின் பெயரும் இன்றளவு பெரிதாக பேசப்பட்டு இருக்கலாம் “