Magic-Music | ‘உன்ன நம்பி நீ முன்ன போகையில பாதை உண்டாகும்’
’ஜெய் பீம்’ திரைப்படத்தில், ராஜு முருகன் எழுத்தில், சீன் ரோல்டன் இசையமைத்து இருக்கும் ‘தல கோதும் இளங்காத்து’ பாடல் கொடுக்கும் அழுத்தங்கள், உணர்வுகள் பற்றி இங்கு பார்ப்போம்.
எந்த அடையாளமும் இல்லாத ஒரு பெண், ஸ்டேசனில் யாரோ செய்த கொள்ளை குற்றத்திற்காக பிணையம் வைக்கப்பட்டு அங்கிருந்து காணாமல் போகும் தன் கணவனை தேடி அலைகிறாள். என்ன ஆனதோ, ஏது ஆனதோ ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமோ என்ற ஏக்கத்தோடு தேடுகையில் ஆரம்பிக்கிறது பாடல்.
”தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்,
மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லி தரும்…”
என்ற முதல் வரியையே, அந்த பெண்ணுக்கு ஆயிரம் உத்வேகம் தரும் வகையில் எழுதி இருப்பார் ராஜு முருகன். ஒவ்வொரு வரியும் அந்த பெண்ணை மையப்படுத்தி அந்த பெண்ணின் நிலையில் இருந்து எழுதப்பட்டு இருக்கும்.
“நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது,
காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே”
காலம் என்னும் தோழன் உனக்கு இருக்கிறான், அது தவிர்த்து உனக்காக நீயும் இருக்கிறாய் தைரியமாக முன்நின்று போராடு, நம்மள நம்ம நம்பி முன்னேறுறபோ, பாதை அதுவாகவே உருவாகும்னு ஒவ்வொரு வரியும் பல நம்பிக்கைகளை தருவதாக அமைந்து இருக்கும்.
“ நூழிலை போல சீன் ரோல்டனின் இசை, அதன் ஊடவே பயணிக்கும் ராஜு முருகனின் அழுத்தமான வரிகள் என எப்போது கேட்டாலும் இப்பாடல் ஒரு பெரிய அழுத்தத்தை கொடுக்கும் “