Magic-Music | ‘ஒரு தேவதை பார்க்கும் நேரமிது, மிக அருகினில் இருந்தும் தூரமிது’
’வாமனன்’ திரைப்படத்தில், நா முத்து குமார் அவர்கள் எழுதி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்த, ஒரு தேவதை பார்க்கும் நேரமிது என்று தொடங்கும் பாடலின் நினைவலைகளை இங்கு உதிர்ப்போம்.
கதாநாயகன் ஒரு நெரிசல் மிகுந்த ஒரு ரயில்வே ஸ்டேசனில், சுற்றி அத்துனை முகங்கள் இருக்கும் போதும் கூட, ஒரு முகத்தை, மனதில் பதிந்து இருந்த அந்த ஒரு முகத்தை பார்க்க நேரிடுகிறான். உயிருக்குள் என்ன என்னவோ உணர்வுகள் மலருகிறது, அவனை அறியாமல் அவன் கண்கள் செயல்பட்டு, அவளின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த நெரிசல் மிகுந்த இடத்தில் ஆயிரம் பேர் உலவினாலும் கூட அங்கு அவன் கண்களுக்கு அவள் மட்டுமே தெரிகிறாள்.
எங்கேயோ பார்த்து, ஏதோ பேசிக் கொண்டு இருக்கும் அவளின் முகம் சட்டென திரும்பி, ஒரு நிமிடம் இவன் முகத்தை பார்த்து ஏதோ சைகை செய்கிறது. அந்த ஒரு நிமிடம் தான் அவனுக்கு அவன் வாழ்க்கையில் அவன் அனுபவிக்கும் ஆகச்சிறந்த சொர்க்கம், இதுவரை இல்லாத பதட்டங்கள் எல்லாம் அவன் உயிருக்குள் தொற்றிக் கொண்டு மூச்சை இழுத்து பெரு மூச்சு விடுகையில் ஆரம்பிப்பது அந்த பாடல்
“ஒரு தேவதை பார்க்கும் நேரமிது, மிக அருகினில் இருந்தும் தூரமிது…..”
காதலை, அழகை, அது அனுபவிக்கும் தூரங்களை, அதன் வாழ்வியல் அழகை கிட்ட தட்ட 5 நிமிடங்களுக்குள் சுருக்கி இருப்பார் நா.மு, ஒவ்வொரு வரியும் ரூப்குமார் குரலில் ஒலிக்கும் போது அதற்கிடையே ஒரு மேஜிக்கல் இசையை சொருவி, நம்மையே அந்த காட்சிக்குள்ளும் காதலுக்குள்ளும் இழுத்து இருப்பார் யுவன் சங்கர் ராஜா.
“மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில், இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்….”
என்ற வரியெல்லாம் பாடலில் வரும் போது, ‘யப்பா கொன்னுட்டான் டா மனுஷன்’ என்ற பீல் தான் நிறைந்து இருக்கும், சலிக்காத பாடல், எப்போது கேட்டாலும் இசையும், ஒலியும், வரியும் அப்படியே பிரஷ்சாக இருக்கும். தற்போதெல்லாம் எந்த பாடலிலும் இந்த மேஜிக் கிடைப்பதில்லை, அதனால் நமது மேஜிக் மியூசிக்கில் இந்த பாடல் எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.