தமிழ் சினிமாவைக் காட்டிலும் கொண்டாடப்படும் மலையாள சினிமா? காரணம் என்ன?
தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவைக் காட்டிலும் மலையாள சினிமாவை ரசிக்கின்ற ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
பிராண்ட் நடிகர்களால் ஆளப்படும் கோலிவுட்?
பொதுவாகவே தமிழ் சினிமா எப்போதும் ஒரு பிராண்ட் நடிகர்களை சுற்றி மட்டுமே இருக்கிறது. அவ்வப்போது மட்டுமே புதிதான களம் தென்படுகிறது. ஆனாலும் அந்த புதிதான களத்தை புகுத்தியவர்கள் அதற்கு அடுத்த படமே பிராண்ட் நடிகர்களால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். அதாவது கோலிவுட் சினிமா இன்னமும் மார்க்கெட்டை சுற்றி மட்டுமே இருக்கிறது. அந்த மார்க்கெட் எப்போதாவது ஒரு நல்ல படத்தை கொடுக்குமே தவிர எப்போதும் நல்ல படங்களை கொடுப்பதில்லை.
சரி, தமிழ் சினிமாவிற்கும், மலையாள சினிமாவிற்கும் அப்படி என்ன வித்தியாசம்?
தமிழ் சினிமா எப்போதும் ஒரு நல்ல மார்க்கெட்டை திறந்து விட்டால் போதும் என்று மட்டுமே நினைக்கிறது. ஆனால் மலையாள சினிமா மலிவான விலையில் தரத்தை கொடுக்க நினைக்கிறது. மார்க்கெட்டையோ, இலாபத்தையோ பெரிதாய் எதிர்பார்ப்பதில்லை. இதனால் தான் மலையாளத்தில் ஐந்தில் குறைந்தது மூன்று சினிமாக்கள் தரமாய் வந்து நிற்கிறது. அதுவே கோலிவுட்டில் எடுத்துக் கொண்டால் தற்போதெல்லாம் வருடத்திற்கு 3 படங்கள் ஹிட் ஆவதே பெரிய விடயமே இருக்கிறது.
பிராண்டுகளால் கெடுகிறதா தமிழ் சினிமா?
பொதுவாக ஒரு படத்திற்கு பிராண்டுகளும், இயக்குநர்களும் கேட்கும் சம்பளம் மட்டுமே படத்தின் ஒட்டு மொத்த வேல்யூவில் 80 சதவிகிதமாக இருக்கிறது. தமிழ் சினிமா ஒரு படத்தை எடுக்க 200 கோடி செலவு செய்தால் அதில் 150 கோடிகள் சம்பளமாகவே போய் விடுவதாக பல தமிழ் பட தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். என்ன எடுத்தாலும் அதில் பிராண்டுகள் இருந்து விட்டால் வசூலை எடுத்து விடலாம் என்னும் நம்பிக்கையில் தயாரிப்பாளர்களும் கோலிவுட்டில் முதலீடு செய்ய தயங்குவதில்லை. இதுவே தமிழ் சினிமாவின் தரம் குறைவதற்கும் காரணமாக கூறப்படுகிறது.
தீடிரென மலையாள சினிமாவை ஏன் தமிழ் ரசிகர்கள் தூக்கி பிடிக்கின்றனர்?
பொதுவாகவே ஒரு ரசிகனின் ரசனை என்பது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். முன்பெல்லாம் ஆக்சன், நான்கு பாடல்கள், மாஸ் சீன்கள் இது மட்டுமே இருந்தால் போதும் ஒரு படத்தின் வெற்றிக்கு, ஆனால் தற்போது ரசிகர்கள் படத்திற்கு படம் வித்தியாசம் எதிர்பார்க்கிறார்கள். புதுமுகங்களை, புது புது கதைகளை, புது புது ரசனைகளை சினிமாவிற்குள் கொண்டு வந்தால் அதை தூக்கி பிடிக்கின்றனர். முக்கியமாக வாழ்வின் இயல்புகளோடு கலந்த சினிமாக்களை ரசிக்கிறார்கள். மலையாள சினிமா அதை எப்போதும் செய்கிறது. தமிழ் சினிமா அதை அவ்வப்போது மட்டுமே செய்கிறது. இதன் காரணமாகவே மலையாள சினிமா தமிழ் ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.
” கோடிகளில் புரளும் சினிமாவை எல்லாம் தற்போது கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை, அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு இயல்பான சினிமா, அந்த இயல்பை இந்த காலக்கட்ட இயக்குநர்கள் கோலிவுட்டிலும் மீட்டெடுப்பார்களா, இல்லை தொடர்ந்து பிராண்டின் பின்னாடி தான் சுற்றப் போகிறார்களா என்பதை பொறுத்து தான் கோலிவுட்டின் எதிர்காலம் இருக்கிறது “