20 பேருக்கும் மேலானவர்களை காவு வாங்கிய ஆப்கானிஸ்தான் விமான நிலையம்

அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றி விட்டனர். அதிபர் அஸ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களும் தொடர்ந்து ஆப்கனை விட்டு வெளியேறும் நோக்கோடு விமான நிலையத்திலேயே தங்கி போராடி வருகின்றனர்.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என்ற நோக்கோடு விமான நிலையத்தின் நெரிசல்களிலும், பாதுகாப்பின்றி விமானத்தின் இறக்கைகளிலும் இதர பாகங்களிலும் அமர்ந்து கொண்டு பாதுகாப்பின்றி பயணம் செய்தவர்கள் என்று 20-க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது இந்த ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம்.

ஒரு பக்கம் இந்த இறப்பிற்கு அமெரிக்க படைகளை குற்றம் சாடும் தலிபான்கள், இன்னொரு பக்கம் தலிபான்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வான் நோக்கி சுடுவதால் பயம் கொள்கின்ற மக்கள் அங்கும் இங்கும் ஓடி அதன் மூலமாகவே நெரிசல்கள் ஏற்பட்டு ஏழு பேருக்கும் மேலாக இறந்துள்ளனர் என்று பிரிட்டிஷ் இராணுவம் கூறுகிறது. நிலம் போனால் என்ன! உடைமைகள் போனால் என்ன! என்று தான் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறி மிச்சம் இருக்கும் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று விமான நிலையத்தை நோக்கி ஓடி வந்தவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளின் சத்தத்தில் பயம் காட்டி ஓட வைத்து உயிர் பயம் காட்டி, நெரிசலில் சிக்க வைத்து கொலைகள் புரிந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

“ ஒரு நாடு தனக்கு பாதுகாப்பானது இல்லை என்று அந்நாட்டு மக்களே வெளியேறுகிறார்கள் என்றால், இது தற்போது அந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தான் அது மிகப்பெரும் இழுக்கு, ஷியா பிரிவினர் படுகொலை, இன்று நெரிசல்கள்,பாதுகாப்பின்றி பயணம் செய்து விழுந்தவர்கள் என்று 20-க்கும் மேற்பட்டோர் பலி, என்று இரத்தங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு சீக்கிரமே ஒரு முடிவினை அளித்திடுங்கள் இந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகளே “

About Author