222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்: ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவை பெறப்போகும் தமிழகம்
தமிழகத்தில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அதில் 172 இடங்களில் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். மீதி பணிகளும் முடிந்து விட்டால் தமிழகம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுவிடும் என்றும் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் தேசத்தில் பல்வேறு உயிர்களை மருத்துவமனையிலேயே துடி துடிக்க வைத்தன. தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல. இந்த நிலையில் தான் மூன்றாவது அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகளை விடுத்து வருகிறது.
தமிழக அரசும் கொரோனோ சூழலுக்கு ஏற்ப மாநிலத்தை தயார் படுத்தி வருகிறது. தடுப்பூசி செயல்பாடுகள், ஆக்சிஜன் தன்னிறைவு, கொரோனோ படுக்கை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்சிஜன் குழலுடன் கூடிய கொரோனோ வார்டுகள் என்று மூன்றாவது அலைக்கு தமிழக அரசு தன்னை சிறப்பாகவே தயார்படுத்தி வருகிறது.
“ இதற்கு முன் கிடைத்த அனுபவங்களே தமிழகத்தின் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு காரணம் என்றாலும், அரசின் சிறப்பான இத்தகைய செயல்பாடுகளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் “