’ எல்லா புகழும் இறைவனுக்கே ‘ – 29 Years Of Rahmanism
’ சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ‘ என்று 29 வருடங்களுக்கு முன்பு தன் இசைப்பயணத்தை தொடர்ந்த இந்த மனிதன் \’ பரம் பரம் பரம் பரம் பரமசுந்தரி ‘என்று இன்றளவும் ஹிட் அடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இசை எப்படி தான் தீராமல் இருக்கிறதோ இந்த இசை மனிதனிடம். இசை என்னும் ஒரு யுகத்தையே தன் கையில் வைத்திருப்பார் போல.
திலீப் குமார் என்னும் சிறுவன்….! சாரி சாரி கதைக்கு ரொம்ப முன்னாடி போயிட்டோமோ..! ஆம் ரஹ்மானின் இயற்பெயர் திலீப் குமார். இடையில் இஸ்லாத்தின் மீது கொண்ட பற்றால் தன் பெயரை ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த ரஹ்மான் தன் தந்தை விட்டுச்சென்ற இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதில் வருமானம் ஈட்டி வந்தார். அதற்கு பின்னர் இசையை முறையாக கற்றுக் கொள்ளும் முனைப்பில் இளையராஜா, தேவா, வித்யாசாகர் என்று பல ஜாம்பவான்களுக்கு இசையைக் கற்றுக்கொடுத்த தன்ராஜ் மாஸ்டரிடம் சிஷ்யனாக சேர்ந்து இசையை நுணுக்கமாக கற்றார்.
1992 காலம் இயக்குநர் மணிரத்னம் அவர்கள் எடுக்கின்ற ரோஜா என்னும் படத்தில் ரஹ்மானுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கிறது. இசையமைக்கிறார், படம் வெளிவருகிறது. பட்டி தொட்டி எங்கும் பரவிக்கேட்கிறது ரோஜா படப் பாடல்கள். ஊரே வியக்கிறது ’யார் அந்த இசையமைப்பாளன் முதல் படத்திலேயே இப்படி பின்னி பெடலெடுத்திருக்கிறான்’ என்று. அது மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே தேசிய அங்கீகாரமும் அந்த இசைக்காக கிடைத்தது. அதற்கு பின் குவிந்த வாய்ப்புகள் தான் இன்றளவும் அந்த இசைப்புயலால் ஓய்வெடுக்க முடியவில்லை.
2008 உலக அரங்கு, ரஹ்மான் அவர்கள் இசைமையத்த ’ஸ்லம்டாக் மில்லியனர்’ என்னும் படத்திற்கு உலக அரங்கில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்படுகிறது. அதுவும் ஒன்றல்ல இரண்டு. உலகமே உற்றுபார்த்துக் கொண்டிருக்கும் அந்த மேடையில் ஏறி ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்ற ஒரு வார்த்தையை உதிர்த்தது அந்த இசைப்புயல். உலகமே தலையில் தூக்கி வைத்து தன்னை கொண்டாடினாலும் அந்த புயல் கர்வம் கொண்டதில்லை அதையும் சிறு புன்னகையில் கடந்து செல்லும். போற்றினாலும் புன்னகை, தூற்றினாலும் புன்னகை அந்த தன்னடக்கத்திற்கு, ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மானே.
” இசை என்பதை ஒரு ரசிகனின் உயிருக்குள் இருக்கும் ஒரு உணர்வாகவே கொண்டு போய் சேர்த்த, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இன்னும் இந்த இசைப்பயணத்தில் நெடு தூரம் சென்று நீடுழி வாழ வேண்டும் “