டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அனபெல் சேதுபதி!
விஜய் சேதுபதி, டாப்சி, இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன் இணையும் அனபெல் சேதுபதி படத்தை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்திருக்கிறார்கள். பட வேலைகள் முழுமையாக முடிந்த நிலையில் படத்தின் வெளியீடு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியிருக்கிறது. காமெடி கலந்த பேய் படமாக அறியப்படும் அனபெல் சேதுபதி செப்டம்பர் 17 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
திரையரங்குகள் திறந்திருக்கும் நிலையிலும் கூட பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர்களால் OTT தளங்களிலேயே ரிலீஸ் என்று அறிவிக்கப்படுவது திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. பேனர்,மாலை,பாலாபிஷேகம்,பேண்ட் என்று காலை முதல்ஷோவிற்கு, முதல் நாள் இரவே கூடும் ரசிகர்கள் கூட்டம், கொண்டாட்டம் என்று திரையரங்குகள் கொடுத்த மகிழ்வுகளை எல்லாம் இந்த வலைதளங்கள் தந்திடுமா என்று தெரியாது. ஒரு ரசிகனாய் பெரும்பாலானோர் தன் ஹீரோவை பெரிய திரையில் கண்டு களிக்கவே விரும்புகின்றனர்.
படத்தில் நஷ்டம் என்று வரும் போது அது தயாரிப்பாளர்களின் தலையில் மட்டும் விழாமல் இன்று நடிகர்களின் தலையிலும் விழுவதால் மட்டுமே இன்று பெரும்பாலான நடிகர்கள் OTT ரிலீஸ்க்கு ஒத்துக்கொள்வதாக சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“ ஒரு திரையில் ஒருவன் மட்டும் உட்கார்ந்து ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு தன் ஹீரோவை தான் மட்டும் ரசிப்பதில் என்ன ஆனந்தம் இருந்து விடப்போகிறது. ரசிக கூட்டங்களாய் விசில்களோடு, அனல் பறக்கும் ஆட்டத்தோடு, தலைவா… தலைவா…. தலைவா… என்று குரல் கணக்க மூன்று மணி நேரம் மூன்று ஷோக்களை விடாமல் பார்த்த போதும் ’அடுத்த ஷோக்கும் வாடா மச்சான்’ என்று யாராவது கூப்பிட்டால் வருவதற்கு ரெடியாக இருக்கும் அந்த ஒரு ரசிகனின் அளவில்லா ஆனந்தத்தை இன்றைய OTT தளங்கள் தந்து விட முடியாது என்பதே சினிமா ரசிகர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது “