தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை சம்மன் அனுப்பி உள்ளது.
ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருக்காலை தொடர்ந்து சுற்று சூழலுக்கும் அந்த பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் உடல் நிலைக்கும் கேடு விளைவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆலையை மூட சொல்லி பல்வேறு தரப்பினர் மனுக்கள் மூலம் பலரிடம் கோரிக்கை விடுத்த போதும் எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் மே ,2018-இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெடித்தது.
போராட்டத்தை காவல் துறையே கலவரமாக மாற்றி, அந்த கலவரத்தை தடுக்கும் நோக்கில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக கூறி 17 வயது பெண் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்றது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில் இதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அன்றைய அரசு விசாரணைக்குழு ஒன்றை அமைத்தது.
இரண்டு வருடங்களாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விசாரணை தற்போது 29 ஆவது கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் 29 ஆவது கட்ட விசாரணக்கு 58 பேருக்கு விசாரணை சம்மன் அனுப்பி உள்ளது நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம். இடைக்கால அறிக்கையை ஏற்கனவே முதல்வரிடம் தாக்கல் செய்துள்ள ஆணையம் முழு அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.
“ நீதி தாமதாகிக் கொண்டே தான் இருக்கிறது. நின்று எகிறி நெஞ்சின் மேல் சுட்டவர்கள் எல்லாம் நிம்மதியாய் சம்பளத்தை வாங்கிக்கொண்டு இருக்கையில், உயிர்களை இழந்த குடும்பம் தான் இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் தங்களின் நிம்மதியை தேடிக்கொண்டிருக்கின்றனர். சீக்கிரம் இந்த விசாரணையில் அவர்களுக்கு தக்க நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்து “