பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் |ரிவ்யூ | கலகலப்புடன் ஆரம்பித்து அழுகையில் முடிகிறது!
பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாவது நாளான நேற்று எபிசோடு, கல கலப்புடன் ஆரம்பித்து, கண்ணீருடன் முடிந்து இருக்கிறது. கேமராக்கள் சுற்றி சுற்றி ராஜு, ப்ரியங்கா, அண்ணாச்சி, சின்ன பொன்னு, இசைவாணி இவர்களை மட்டுமே கவர் செய்து எபிசோட்டை நிறைவு செய்வதாக தெரிகிறது. அது சரி ரிவ்யூவிற்கு வருவோம்.
நடுராத்திரியில் சமையலறையில் பசியென பாத்திரங்களை உருட்டும் பூனையாய் ராஜூ, இரவு 12 மணிக்கு அங்குமிங்குமாய் சுற்றி, பாத்திரங்களை உருட்டிக் கொண்டு இருக்கிறார். உடனே அவரை அழைத்து நிரூப், சமையலறைக்கு சென்று அவருக்கு ப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கிறார். அண்ணாச்சியும், ராஜுவும் சேர்ந்து அதை சாப்பிடுகிறார்கள். அத்தோடு அந்த இரவு கழிகிறது.
காலை 8 மணிக்கு வலிமை படத்தின் ’வேற மாறி…வேற மாறி… வேற மாறி…’ சாங்குடன் பிக்பாஸ் ஹவுஸ் விடிகிறது. பிக்பாஸ்சுக்கு தெரிந்திருக்கும் போல போட்டியாளர்கள் அத்தனை பேருமே இங்கு வேற மாறி தான் என்று ,கரெக்டாக சாங் தெரிவு செய்திருக்கிறார், ஒரு பக்கம் எந்திரித்ததுமே ரெஸ்ட் ரூம் அருகில் நின்று கொண்டு பிக்பாசை பெருசு, ஒத்த கண்ணு என்று கலாய்த்துக் கொண்டு இருக்கிறார் பிரியங்கா, அந்த கேமராவிற்கு மட்டும் காதுகள் இருந்திருந்தால் பிரியங்காவின் அந்த மொக்க கலாய்ப்பிற்கு அது ரத்தம் சிந்தி இருக்கும்.
இன்னொரு பக்கம் சிபி, பவ்னி ரெட்டிக்கு, தலைவரின் டையலாக் ஒன்றை கத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரோ அந்த டையலாக்கை ஹாலிவுட் பட டப்பிங் பாணியில் மிமிக்ரி செய்தால் எப்படி இருக்கும் அது போல, ஒரு வழியாக இழுத்து இழுத்து சொல்லி முடிக்கிறார். சீரியல் பாஷை பேசுகிறேன் என்று பிரியங்கா ஒரு 5 நிமிடத்திற்கு அவரே பேசி, அவர் மட்டுமே சிரிப்பலை புரிகிறார். அங்கு தான் சிரிப்பலை, இங்கு வெறுப்பலை தான்.
ஓரு பக்கம் ஆம்லேட், ஆபாயில், தேங்கா எண்ணெய், விளக்கெண்ணனு அண்ணாச்சியும், சூரி காமெடி புரிகிறார். இது ஒரு பக்கம் இருக்க பழைய ஜோக் தங்க துரையே ஹவிஸ்சிற்குள் நுழைந்தாற் போல அபினய், அபிஷேக்கிடம் ஆதிகாலத்து ஜோக்குகளை அள்ளி விடுகிறார். ராஜு தலைமையில் ஒரு பக்கம் யோகா கிளாஸ் நடக்கிறது. இடையிடையே அங்கு புகுந்து கலாய்க்கும் நோக்கில் அண்ணாச்சி தன் கலாய்ப்புகளை அள்ளி விடுகிறார். ஆனால் அந்த யோகா கிளாஸ் குழுவினரோ அதை காது கூட கொடுத்து யாரும் கேட்பதாய் இல்லை. தூர போங்க அண்ணாச்சி என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்.
அடுத்ததாக இயாக்கி – இமான் அண்ணாச்சி இருவரும் கேமராவுடன் கதை பேசிக் கொண்டிருக்கின்றனர், அதற்கு பின் வருண், அக்ஷாரா ரெட்டி தலைமையில் 90 கிட்ஸ்சின் தொட்டு பிடித்து விளையாடும் போட்டியும் உள்ளுக்குள் அரங்கேறியது. பின்னர் பிக்பாஸ் தனக்கே உரிய குரலுடன் சிபி அவர்களை கன்பசன் ரூம்க்கு அழைத்து ஒரு லெட்டர் பேடை கொடுத்து, அனைவரையும் லிவிங் ரூம்க்கு அழைத்து, அதை வாசிக்குமாறு சொல்லி அனுப்புகிறார்.
பெரிதாய் ஒன்றுமில்லை. வழக்கம் போல லக்சுரி பட்ஜெட் டாஸ்க் தான், ‘ஒரு கதை சொல்லட்டும்மா’ என்பது கொடுக்கப்பட்ட தலைப்பு, போட்டியாளர்கள் தங்களின் வாழ்வியலை அனைவரின் முன் அந்த தலைப்பின் கீழ் கதையாக விளக்க வேண்டும். அதற்கு சக போட்டியாளர்கள் லைக், டிஸ்லைக், ஹார்ட் கொடுக்க வேண்டும். இதுவே டாஸ்க்.
இந்த டாஸ்க்கிற்கு முதலாவதாக பிக்பாஸ்சால் அழைக்கப்படுகிறார் இசைவாணி. பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலே அவர் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடுகிறது. அவரின் வாழ்வியல் அவருக்கு அவ்வளவு கஸ்டத்தை கொடுத்திருக்கும் போல. அவர் உருக்கமாக பேச பேச சுற்றி இருக்கும் சக போட்டியாளர்களும் தங்களை அறியாமலே கண்ணீர் சிந்தி விடுகின்றனர். அப்பா, அம்மா, வாடகை வீடு, கஸ்டம், ஒரு வேளை சாப்பாடு, கானா என்று தன் வாழ்வியலை அவர் அழுத்தமாக சொன்ன விதம் நிச்சயமாக நம் இதயத்தையும் ஒரு நிமிடம் பிழிந்து எடுத்தது. முடிவில் சக போட்டியாளர்களிடம் இருந்து 11 லைக்குகள் 6 ஹார்ட்டுகள் வாங்கி ஒரு கானாவுடன் தன் கதையை முடித்தார் இசைவாணி.
இது முடிந்ததும் சிறிய கேப் விடப்பட்டது. இந்த இடைவெளியில் ஹவுஸ்மேட்ஸ், ஹவிசிற்கு வெளியில் அமர்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தனர். அங்கு அபிஷேக் தனக்கும் தன் அம்மாவிற்கும் இடையேயான ஒரு உறவைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார். ‘நாங்க ரெண்டு நிமிஷம் பேசினாலே எங்களுக்குள்ள சண்ட வந்துரும், நான் எவ்ளோ ரூபா கொண்டு போய் எங்கம்மா மடில கொட்டுனாலும் எங்கம்மா என்கிட்ட கேக்குறது என் கூட இருடா, என் கூட சாப்பிடுடானு அத மட்டுமே என்கிட்ட எதிர் பார்ப்பாங்க’ன்னு சொல்லி முடிக்கும் போது அந்த அம்மா செண்டிமெண்ட்ல நம்மையும் அழ வச்சிடுறார். பொதுவாம நாம் கலாய்த்திடும் அபிஷேக்கின் தோணி அவரின் அம்மாவை பற்றி அவர் பேசும் அந்த நிமிடம் அவரிடம் இல்லை.
அதற்கு பின் இரண்டாவதாக, சின்ன பொன்னு அவர்கள் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ டாஸ்க்கின் கீழ் கதை சொல்ல முன் வருகிறார். தன் குடும்பம், கிராமம், கஸ்டம் என்று ஒற்றைக் குடிசையில் படுக்க கூட இடம் இல்லாத இடத்தில் வளர்ந்து, பல தடைகளை எல்லாம் கடந்து கலையை நோக்கி சென்று இந்த உயர்வை அடைந்திருப்பதாக சொன்ன அவரின் வாழ்வியலைக் கேட்டும், சுற்றி எங்கும் கண்ணீர் மலர்ந்தது. முடிவில் சக போட்டியாளர்களிடம் இருந்து 10 லைக்குகள், 6 ஹார்ட்டுகள், 1 டிஸ்லைக்குகள் வாங்கினார்.
அந்த ஒரு டிஸ்லைக்குகளை கொடுத்தது ராஜு, அதற்காக அவர் சொன்ன காரணமும் ஏற்கும் படியாக இல்லை. ஒருவர் தன் வாழ்வியலையும், அதில் தான் சந்தித்த கடினமான தருணங்களையும் கண்முன் நிறுத்தி பொதுவெளியில் சொல்லும் போது, யாராக இருந்தாலும் கண்ணீர் வரத்தான் செய்யும். ஆனால் அவரோ உங்கள் வாழ்வியலை கூறும் போது ’அழுதிடாமல் ஆட்டிடியூடன் சொல்லுங்கள், அதுவே மற்றவர்களை இன்ஸ்பைர் செய்யும்’ அதற்காகவே உங்களுக்கு டிஸ்லைக் கொடுத்தேன் என்று அவர் கருத்தை முன் மொழிந்தார். அவர் சொல்வது ஒரு பக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் மனதின் பால் யோசித்தால் மறுக்க கூடியதாகவே இருக்கிறது.
“ ஆக மொத்தம், எபிசோடுகளின் முற்பாதியில் கல கலவென சிரிக்க வைத்து விட்டு, பிற்பாதியில் அவர்களும் அழுது, நம்மையும் அவர்களின் வாழ்வியலோடு யோசிக்க வைத்து, ஒன்ற வைத்து, அழ வைத்து விட்டனர் “