2.44 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை விழுங்கிய காட்டு தீ – கலிபோர்னியா
வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ கொஞ்சம் கொஞ்சமாக வனம் முழுக்க பரவி தற்போது 2,44,888 ஏக்கர் நிலப்பரப்பினை ஆக்கிரமித்து உள்ளது.
சுமார் இரண்டு லட்சத்து நாற்பத்து நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விழுங்கிய இந்த காட்டு தீக்கான காரணம் இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங்காங்கே அவ்வப்போது எரிந்து எல்லா இடங்களும் பரவுகையில் சுற்றி இருக்கும் கட்டிடங்கள்,கார்கள், மக்கள்வாழும் பகுதிகள், வன உயிரிகள் என்று எதையும் பாரபட்சம் பார்க்காமல் தனக்கு இரையாக்கி கொள்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பாதுகாப்பு கருதி பல்லாயிரக்கணக்கோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இது தவிர்த்து அமெரிக்கா முழுவதும் 83 வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டு வருவதாகவும் மொத்த வனப்பகுதிகளில் 32 சதவிகித வனப்பகுதிகளை காட்டு தீ தனக்கு இரையாக்கி இருப்பதாகவும் வனத்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 கட்டிடங்கள் 342 வாகனங்கள் காட்டு தீ-க்கு இரையாகி இருப்பதாகவும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் மாகாண அரசு அறிவித்துள்ளது.
“ இதுவரை இந்த உலகம் இயற்கையை சீண்டிக் கொண்டிருந்தது. தற்போது இயற்கை இந்த உலகை சீண்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறது “