இன்று கேப்டன் விஜயகாந்த்க்கு பிறந்தநாள்!

திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டையில் பிறந்து மதுரையில் வளர்ந்தவர். சிறு வயதில் அரிசி ஆலைகளில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக்கொண்டிருந்தவர் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக படிப்பின் மேல் இருக்கும் நாட்டத்தை கைவிட்டார்.

விஜயகாந்த் அவர்களின் இயற்பெயர் நாராயணன் (எ) விஜய ராஜ். 1978-இல் வெளிவந்த ‘இனிக்கும் இளமை ‘ என்னும் படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார் விஜய ராஜ். அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ. காஜா தான் இவரது விஜய ராஜ் என்னும் பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார். அதற்கு பின் பலபடங்கள் வெளி வந்திருந்தாலும் 1981-இல் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்னும் படம்தான் விஜய்காந்தை ஒரு அதிரடி நாயகனாக தமிழகத்தின் எல்லா ரசிகர்களிடையேயும் கொண்டு போய் சேர்த்தது. அன்றிலிருந்து இன்று வரை விஜயகாந்த் படம் என்றாலே ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது ஒரு அதிரடியான சீன்களும் அமர்க்களமான சண்டைகளும் தான்.

கமல்,ரஜினி என்ற இரு பெரும் நடிகர்களுக்கிடையே ஒரு போர் நடந்து கொண்டிருந்த காலம். அவர்கள் இருவருக்கும் இடையில் முளைத்து தனி ஒரு கதாநாயகனாக உருவெடுத்து அப்போதே தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்தார். அன்றைய கட்டத்தில் திரையரங்குகளில் கமல் படம் திரையிடுவதா ரஜினி படம் திரையிடுவதா என்று மிகப்பெரிய சண்டைகள் நிலவி வரும். திரையரங்கு முதலாளிகள் விவரமாய் விஜய் காந்த் படத்தை திரையிடுவர். அங்கு கமல் ரசிகனும் வந்து நிற்பான் ரஜினி ரசிகனும் படம் பார்க்க வந்து நிற்பான் விவகாரம் பிரச்சனையின்றி முடிந்து விடும். வசூலும் நிறைந்து விடும்.

1984-இல் 18 படம், 1985-இல் 17 படம் என்று தனி ஒரு கதாநாயகனாக விஜயகாந்த் அவர்கள் விட்டு சென்ற அந்த சாதனையை இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. ரஜினி கமலுக்கே அவர்களின் 100 ஆவது படம் பெரிதளவில் போகாத நிலையில் விஜயகாந்த் அவர்களின் 100-ஆவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ பட்டி தொட்டி எங்கும் ஓடி அவருக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றுந்தந்தது. அந்த படத்திலிருந்தே விஜயகாந்த் அவர்கள் தமிழக ரசிகர்களால் கேப்டன் விஜயகாந்த் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இது வரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் விஜயகாந்த் எந்த துறையில் கால் பதித்தாலும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை அதில் நிலை நாட்டிடுவார்.

“ வெகுளி குணம், வெளிப்படையாய் பேசிடும் சுபாவம், கருப்பு வைரம் ஆனாலும் வெள்ளை மனம், என்று எத்தனையோ குணாதியங்களையும், திறமைகளையும் நம்மிடையே வெளிப்படுத்தி நம்மை ரசிக்க வைத்து விட்டு இன்று முகத்தை கூட வெளி உலகத்துக்கு காட்ட முடியாத நிலையில் துவண்டு இருக்கும் விஜயகாந்த் அவர்கள் வெகுவாக மீண்டு, நல்ல உடல் நலத்துடன் மறுபடியும் கேப்டனாக திரும்பி வர வேண்டும், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களே “

About Author