குழந்தை தொழிலாளர்களை அதிகரித்திருக்கிறதா இந்த கொரோனோ காலம்…?

இரண்டு வருட இந்த கொரோனோ காலத்தில் இந்த உலகில் தான் எத்தனை மாற்றம்..! அந்த மாற்றங்களுள் நிகழ்ந்தவை தான் இந்த விரும்ப தகாத மாற்றமும்..! புள்ளி விவரங்கள் இல்லை, ஆனால் கண்களால் விவரமாய் பார்க்க முடிகிறது.  ஆம் இந்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை.

வெளியில் வேலை இல்லை, வீட்டில் வருமானம் இல்லை, தகுந்த தொழில் இல்லை ஆனால் இருப்பதெல்லாம் பண தேவையும் கஸ்டமும். நடுத்தர மனிதன் என்ன தான் செய்வான்?, பள்ளிகள் இல்லாததை தன் கஸ்டத்திற்கு சாதகம் ஆக்கி கொண்டவன் பழுது பார்க்கும் கடைகளிலும் பலசரக்கு கடைகளிலும் போய் நின்று “டெய்லி 100 ரூபா கொடுங்கய்யா போதும் என் பையன வேலைக்கு வச்சிக்கோங்க” என்று கேட்க ஆரம்பித்து விட்டான்.

அதன் விளைவு இன்று திரும்பி பார்க்கும் ஏதாவது ஒரு கடைகளிலும் தொழிற்சாலை அல்லாத நிறுவனத்திலும், ஹோட்டலிலும் என எங்கு பார்த்தாலும் 14 வயதை நிரம்பாத பல  சிறுவர்களும் சிறுமிகளும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைக்கு யாரின் மேல் தான் பழி போடுவது..? கொரோனோவின் மேலா..? இல்லை அந்த கொரோனோ கொடுத்த கஸ்டத்தின் மேலா…? அந்த கஸ்டத்தின் விளைவாய் தன் பிஞ்சு குழந்தைகளை வேலைக்கு அனுப்பிய பெற்றோர்களின் மேலா…? இல்லை இதையெல்லாம் பார்த்து சகித்துக்கொண்டிருக்கும் இந்த அரசின் மேலா…? என்ற கேள்வியே சாலையில் அந்த சிறுவர்களைப் பார்த்து கடந்து சென்று கொண்டிருக்கும் சக மனிதனின் கேள்வியாய் இருக்கிறது.

“ குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்று கூறிய அப்துல் கலாம் இருந்த இந்த நாட்டில் தான், புத்தகம் ஏந்த வேண்டிய இந்த பிஞ்சு கைகள், கையில் எச்சில் தட்டை கழுவிக் கொண்டிருக்கின்றன “

About Author