நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் – மு.க.ஸ்டாலின்
சட்டபேரவையில் தனக்கு விதித்த நேரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லை மாநகரில் 15 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் என்னும் பெயரில் மாபெரும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வழிவகுக்கப்படும் என்று சட்டபேரவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.
கடந்த சில வருடங்களாக நடைபெறும் கீழடி அகழ்வாய்வுகளும் சரி, ஆதிச்சநல்லூர், சிவகளை அகழ்வாய்வுகளும் சரி, உணர்த்துவது ஒன்று தான் தமிழ் என்னும் நாகரீகம் இங்கு முளைத்த அனைத்து நாகரீகத்திற்கும் மூத்தது. அங்கு கிடைத்த சிதைவுகளையும் பொருட்களையும் ஆராய்வதோடு முடித்து விடாமல், உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் அருங்காட்சியகங்களில் வைத்து முறையாக பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு சமூக வல்லுநர்களால் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அது தற்போது நிறைவேறி உள்ளது.
இதன்படி ஏற்கனவே கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தான் தண்பொருநை நாகரீகம் எனப்படும் தாமிரபரணி நதிக்கரையோரம் கிடைத்த படிமங்கள், சிதை பொருள்கள் பற்றி ஆராய்ந்த பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வு மையத்தை சேர்ந்த அமெரிக்க வல்லுநர்கள் குழு, அது கிட்ட தட்ட 3200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து தான் தண்பொருநை நதிக்கரையோரம் கிடைத்த அரிய பொருள்களையும் பாதுகாக்கும் நோக்கில் அருங்காட்சியகம் கண்டிப்பாக அமைத்திட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வலுவாக விடுத்து வந்தனர்.
இதன் மூலமாகவே ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த தண்பொருநை நாகரீகத்திற்குரிய அரிய வகை பொருட்கள், நெல்லை மாநகரில் 15 கோடி செலவில் தண்பொருநை அருங்காட்சியகம் என்னும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அங்கு முறையாக பாதுகாக்கப்படும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
” தமிழன் இப்படி எல்லாம் வாழ்ந்தானா என்று வியக்கும் அளவுக்கு இருக்கும் சான்றுகளை எல்லாம் ஒரு தரப்பு எப்படியேனும் அழித்து விட வேண்டும் என்று முயலுகையில் அதை காக்கும் நோக்கில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் “