கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,359 பேருக்கு புதியதாக தொற்று,266 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,359 பேர் புதியதாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,35,050-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 58 கோடியை கடந்துள்ளது. முதல் தவணையாக 45.11 கோடி பேரும் இரண்டாவது தவணையாக 12.95 கோடி பேரும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் நான்கில் ஒரு பங்கினரே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இரண்டு தவணையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டால் மட்டுமே இந்த தொற்றிலிருந்து 60 சதவிகிதமாவது தப்பிக்க முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களுள் முக்கால்வாசி பேர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள தவறுவது எந்த விதத்தில் சரியானது என்று தெரியவில்லை.

இது மட்டுமில்லாது டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றின் வீரியமும் தற்போது இந்தியாவில் உயரத் தொடங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 103 பேருக்கு மேலாக டெல்டா பிளஸ் கொரோனோ தொற்று பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது, இது டெல்டா மற்றும் ஏனைய வகை கொரோனோ வைரஸ்களை விட வேகமாக பரவும் வல்லமை பெற்றதாக இருப்பதால் தற்போதைய நிலையை மட்டும் கருத்தில் கொண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

“ ஒரு பக்கம் வெகுவாக குறைந்து வரும் கொரோனோ தொற்று, இன்னொரு பக்கம் மூன்றாவது அலை குறித்த பயம் என்று இரண்டுக்கும் நடுவில் இருந்து கொண்டு இயல்பு நிலையைத் தேடி கொண்டிருந்தால் இந்த தொற்றின் வீரியம் வெகு சீக்கிரமே மறுபடியும் அடுத்த நிலைய அடையவும் வாய்ப்புகள் இருக்கிறது “

About Author