கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,119-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,523-ஆக உள்ளது.
தொடர்ந்து கொரோனோவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 12 அன்று தமிழகம் முழுக்க 10,000 தடுப்பூசி முகாம்கள் அமைத்து இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. இது போக விழாக்கள், பண்டிகைகள், மதம் சமயம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கு அக்டோபர் 31 வரை தமிழகத்தில் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனோ இரண்டாவது அலையின் போது தொற்றின் பரவலுக்கு பெரும்பாலும் காரணமாக சொல்லப்பட்டது பண்டிகைகளிலும், பொது நிகழ்வுகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாய் கூடியதன் விளைவு தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மூன்றாவது அலையை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
“ மக்களாகிய நாம் தான் பரவலை மேற்கொள்கிறோம் என்பதை தனி ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு சமூக பொறுப்புணர்வுடன் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முறையாக கையாண்டாலே இங்கு பரவலை பெரிதும் கட்டுப்படுத்தி விடலாம், ஆகவே பொறுப்புடன் செயல்படுவோம், மூன்றாவது அலையை தடுத்திடுவோம் “