பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட முக்கிய 5 சட்டங்கள்!

Five Important Laws That Protects And Empowering Girl Child In India Idamporul

Five Important Laws That Protects And Empowering Girl Child In India Idamporul

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட முக்கிய 5 சட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. Pre-Conception Pre-Natal Diagnostic Techniques (Prohibition of Sex Selection) Act, 1994:  PCPNDT எனப்படும் இச்சட்டம் பெண் கருக்கொலைகளை தடுக்கவும், பாலின சமத்துவத்தை பாதுகாக்கவும் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். 1994-ற்கு முந்தைய காலக்கட்டங்களில் கருவில் இருப்பது பெண்னா, ஆணா என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அப்பட்டமாக இருந்த காரணத்தால், பெண் குழந்தைகள் என்று தெரிந்ததும் ஒரு சிலர் கருவிலேயே சிசுக்கொலை செய்து வந்தனர். இதனைச் சுட்டிக் காட்டி கொண்டு வரப்பட்ட சட்டம் தான் PCPNDT Act 1994, இச்சட்டத்தின் மூலம் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்ள நினைப்பதும், தெரியப்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என வரையறை செய்யப்பட்டது.

2. Hindu Succession (Amendment) Act, 2005 : ஒரு காலக்கட்டத்தில் வீட்டில் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் என இருக்கும் போது, பாரம்பரிய சொத்துக்கள் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே சொந்தமாகிக் கொண்டு இருந்தது. அதனை சமநிலைப்படுத்தும் விதத்திலும், பாரம்பரிய சொத்துக்கள் ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் சமமான விகிதத்தில் பகிரப்பட வேண்டும் என்பதை வரையறை செய்வதற்காக இயற்றப்பட்ட சட்டம் இது ஆகும்.

3. Right of Children to Free and Compulsory Education Act, 2009: ஒரு காலக்கட்டத்தில் ’பிற இடத்தில் கட்டி தானே வைக்க போகிறோம், இந்த பெண் பிள்ளைகள் ஏன் படிக்க வேண்டும்?’ என்ற ஒரு கருத்து அனைவரின் மனதிலும் இருந்தது. அதை உடைத்தெறியும் வகையில் 6 வயது முதல் 14 வயது வரை இருக்கும் அனைவருக்கும் கட்டாய கல்வியை இச்சட்டம் மூலம் அரசு வரையறை செய்தது. ஆனாலும் இச்சட்டம் ஆண், பெண் பிள்ளைகள் என இருவருக்குமானதாகவே வரையறை செய்யப்பட்டது

4. The Prohibition of Child Marriage Act, 2006: அந்த காலக்கட்டங்களில் எல்லாம் பெண் பிள்ளைகள் 10 வயதிலேயே மணம் முடித்ததுண்டு. பருவ காலம் என்று ஒன்றும் வரையறுக்கப்படாமல் சிறுமிகளாக இருக்கும் போதே வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அத்தகைய நிகழ்வுகளை தடுக்கும் வகையில், பெண் பிள்ளைகளின் திருமண வயதை 18 என நிர்ணயித்து இச்சட்டத்தின் மூலம் குழந்தை திருமணம் என்பது வெகுவாக தடுக்கப்பட்டது.

5. Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 : சிறார்களின் பாதுகாப்பிற்காக வரையறை செய்யப்பட்ட சட்டம், இது ஆண் மற்றும் பெண் என இரு குழந்தைகளுக்கும் பொருந்தும். பெற்றோர்களால் கைவிடப்பட்டு, சமூகத்தில் வழி தவறி செல்கின்ற குழந்தைகளின் நலனை பாதுகாப்பதில் இச்சட்டம் கவனம் செலுத்துகிறது.

ஒரு பெண் என்பவள் சமூகத்தில் சமநிலையை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருக்கிறாள், இன்னமும் பெண் குழந்தைகள் தங்களுக்கான சுதந்திரத்திற்காக நிறையவே போராட வேண்டி இருக்கிறது. தங்களை தினம் தினம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இந்த தேசத்தில் நிறையவே இருக்கிறது. தினம் ஒரு சட்டம் இயற்றினாலும் கூட இங்கு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

“ இறுக்கமான இந்த தேசத்தின் சூழலை விலக்கி, பெண் பிள்ளைகளுக்கும் சிறகுகள் கொடுத்து, இந்த சுதந்திர நாட்டில் சுற்றித் திரிய வைக்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசையும், அதற்கு இந்த தேசம் என்று தான் தன் வானை விரித்து வழிவிட போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author