மக்களைத்தேடி மருத்துவம் இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

’மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சகம் மூலம் இன்று முதல் தமிழகம் முழுக்க ஏழு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது.

தொற்றாத நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மாத்திரை மருந்துகளுக்காக மருத்துவமனைகளைத் தேடி தொடர்ந்து அலைய முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நோயாளிகளுக்கு பயனளிக்கும் பொருட்டு ’மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கோவை,சென்னை,சேலம்,மதுரை,தஞ்சாவூர்,திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஏழு மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதற்கு பின் எல்லா மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் 20 லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு பின் ஒன்றரை கோடி பேரை சென்றடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாமல் தேவையான மருந்துகள் மாத்திரைகளை வாங்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் நோயாளிகளுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவிகரமாய் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர் “

About Author