மன அழுத்தம் குறைய என்ன செய்யலாம்?

Facing Depression

Facing Depression

மன அழுத்தம் இன்று பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. வேலையின்மை, வேலைப்பளு, காதல் தோல்வி, சமூக நெருக்கடிகள், இன்னல்கள் என்று பலவும் இன்று ஒரு மனிதனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஒரு சிலர் மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாது தற்கொலை என்ற விபரீத முடிவுகளையும் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஓரு சாதாரண மனிதனை இன்னல்களுக்குள்ளாக்கும் இந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ள என்ன செய்யலாம்?

1) பிடித்த செயல்பாடுகளுக்குள் மூழ்குதல் – ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு செயல்பாடுகள் இயல்பாகவே பிடித்துப்போகும். உதாரணத்திற்கு கவிதை எழுதுதல், கதை எழுதுதல், ஓவியம் வரைதல், திரைப்படம் பார்த்தல், வெப் சீரிஸ், மீம்ஸ் இடுதல் ஏதாவது ஒரு செயல்பாட்டில் நம்மை அறியாமலே மூழ்கி கிடப்போம். உங்களை மன அழுத்தம் ஆழ்த்தும் போது உங்களுக்கு பிடித்த இது போன்ற செயல்பாடுகளில் கிடந்து அதிலேயே மூழ்கிப்போகுங்கள். அது உங்களை இலகுவாக்கும்.

2) இசை – இசைக்கு மயங்கா உயிர்கள் இல்லை, காதிற்கு அடக்கமாய் ஒரு ஹெட்போன் வாங்கிக்கொள்ளுங்கள், மொபைல் முழுக்க இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் மெலடிகளை போட்டு விட்டு மெத்தைகளில் ஆழ்ந்துவிடுங்கள். அது இறுகிய மனதிடம் இசை பேசி பேசி இலகுவாக்கிவிடும்.

3) நண்பர்களுடன் சுற்றுலா – எப்போதேனும் மன அழுத்தத்தை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு பிடித்த நண்பன் ஒருவனை அழைத்து ஏதாவது ஒரு இடத்திற்கு பைக்கில் பேசிக்கொண்டே செல்லுங்கள். இல்லை ஒரு காமெடி படத்துக்கு அழைத்துச்சென்று தியேட்டருக்குள் உட்கார்ந்து குலுங்க குலுங்க சிரித்து வாருங்கள். அது உங்கள் மனதை இறுக்கத்திலிருந்து எளிதாக்கும்.

4) பிடித்தவர்களுடன் ஒரு கன்வர்சேசன் – மனது குலைந்து காணப்படும் வேளையில் நம் மனதுக்கு இணக்கமான ஏதாவது ஒரு உறவிடம் ஹாய் என்று பேசத்தொடங்குங்கள். மகிழ்ச்சியான அவருடனான நினைவுகளை பேசுங்கள். கலாய்த்து பேசுங்கள். யாவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்கள் மனதை பலப்படுத்தும்.

“ இந்தியாவைப் பொறுத்தவரை நான்கில் ஒருவர் மன அழுத்தத்தோடு இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. உங்களை மன அழுத்தம் புரட்டிப் போடுகையில் அதனுடன் முடிந்த அளவுக்கு போராடுங்கள். எண்ணங்கள் விரக்தியில் கொண்டு விட்டால் மாநில மன அழுத்த உதவிமையம் 104 -க்கு அழைத்து பேசிடுங்கள். அதுவும் இல்லையேல் உங்கள் மனதுக்கு இணக்கமானவர்களிடம் உங்கள் அழுத்தங்களை உளறிடுங்கள், உங்களை எப்பொழுதும் இலகுவாகவே வைத்துக் கொள்ளுங்கள். ”

About Author