42 குழந்தைகள் கடத்தல், 6 குழந்தைகள் கொடூர கொலை, இந்தியாவை உலுக்கிய மூன்று பெண் சீரியல் கில்லர்கள்!
மஹாராஷ்டிராவில் குழந்தை கடத்தல், கொள்ளை, கொலை என பல வித குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பெண் சீரியல் கில்லர்களை பற்றி பார்க்கலாம்.
யார் இந்த காவித் குடும்பத்தினர்?
1990 காலக்கட்டங்களில் மஹாராஸ்டிராவில் வசித்தவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயந்தனர். அதற்கு காரணம் இந்த காவித் குடும்பத்தினர். அஞ்சனா பாய் காவித், இவர் தான் சீமா காவித் மற்றும் ரேனுகா ஷிண்டே இவர்களின் தாயார். மஹாராஸ்டிராவின் கூட்டமான தெருக்களில் பிக்பாக்கெட் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தி வந்தவர்.
காவித் குடும்பத்தினரின் ஆரம்ப காலக்கட்ட குற்ற சம்பவங்கள்
ஒரு முறை கோவிலில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற போது ஒருவரிடம் சிக்கிக் கொண்டார் அஞ்சனா பாய். ஆனாலும் சுற்றி இருப்பவர்கள் ’இரண்டு குழந்தைகளை கையில் வைத்து இருக்கிறார். இவரா இப்படி செய்து இருப்பார், இருக்காது’ என்ற மனநிலையுடன் அஞ்சனா பாய் அவர்களை அணுகவே, அவரும் அதை பயன்படுத்திக் கொண்டு அந்த சம்பவத்தில் இருந்து தப்பித்தார். இந்த சம்பவம் அஞ்சனா பாய் அவர்களுக்கு ஒரு புதிய கொள்ளை சிந்தனையை உருவாக்கியது. அதாவது குழந்தை நம் கையில் இருந்தாலோ, அல்லது குழந்தைகள் திருடினாலோ, பிடிபட்டாலும் சுற்றி இருப்பவர்களின் மனநிலையை வைத்து தப்பித்து விடலாம் என்ற சிந்தனை அவருக்குள் தோன்றியது.
முதல் கொலை
முதலில் தன் குழந்தைகளை வைத்தே இந்த பிக்பாக்கெட், கொள்ளை ஐடியாவை பல இடங்களில் நிகழ்த்த அது நன்றாகவே அவருக்கு கை கொடுத்து இருக்கிறது. பின்னர் பிற குழந்தைகளை கடத்தி இதை செய்ய வைக்கலாமே என்ற சிந்தனை மூவருக்கும் எழுகிறது. முதலாவதாக சந்தோஷ் என்ற ஒரு ஆண் குழந்தையை கடத்துகிறார் அஞ்சனா பாய். ஆனால் அந்த குழந்தை கத்திக் கொண்டே இருக்க கோபமுற்ற அஞ்சனா பாய் அந்த குழந்தையின் தலையை போஸ்ட் கம்பத்தில் முட்டி கொலை செய்து இருக்கிறார். பின்னர் அந்த குழந்தையின் உடலை ஆட்டோ ரிக்ஸா ஒன்றில் போட்டு தப்பித்து இருக்கின்றனர்.
அதற்கு பின்னர் பல குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைப்பது, பிக்பாக்கெட் அடிக்க வைப்பது, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுத்துவது என பல குற்றங்களை புரிந்து வந்திருக்கின்றனர். தங்கள் இசைவுக்கு அடங்காத குழந்தையை மூவரும் இணைந்து கொன்று யாரும் இல்லாத இடங்களில் தூக்கி வீசுவதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். கிட்ட தட்ட 1990-96 காலகட்டங்களில் மட்டும் 42 குழந்தைகளை இந்த மூவரும் இணைந்து கடத்தி இருப்பதாகவும், அதில் 6 குழந்தைகளை கொடூரமாக கொன்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பிடிபட்ட சீரியல் கில்லர்கள், குற்றத்திற்கான தண்டனை
நவம்பர் 19, 1996, அஞ்சனா பாய் காவித், தான் கடத்திய குழந்தை ஒன்றை கொல்ல முற்பட்ட போது, மஹாராஸ்டிரா போலீஸ்சின் பிடியில் சிக்கி இருக்கிறார். அவரின் வழியாக அடுத்தடுத்து சீமா காவித், ரேனுகா ஷிண்டே என இருவரும் பிடிபட்டு இருக்கின்றனர். தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படவே, உண்மை அனைத்தும் வெளிவந்து, ஆதாரங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, தண்டனையாக மூவரும் சாகும் வரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டனர். அஞ்சனாபாய் காவித் அவரின் தூக்கு தண்டனை நிறைவேறும் காலத்திற்கு முன்னதாகவே உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். சீமா மற்றும் ரேனுகா மன்னிப்பு மனு கோரி அரசிடம் முறையிடவே அவர்களின் டெத் சென்டன்ஸ், வாழ் நாள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
“ சிறு குழந்தைகளிடம் கூட இரக்கம் காட்டாதவர்களை விடுவித்தால், நாளை ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுவர், இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்கட்டும் – இவை காவித் குடும்பத்தினரின் தீர்ப்பின் போது நீதிபதிகள் கூறிய வார்த்தை “