பில்கிஸ் பானு வழக்கு என்பது என்ன? 22 ஆண்டுகளாக அந்த வழக்கு இன்னும் பேசப்படுவது ஏன்?
கர்ப்பமுற்று இருந்த ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பின் நடந்தது என்ன? தற்போது 2024 வரை அந்த வழக்கு இன்னும் ஏன் பேசப்படுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது ஆறு மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு 12 பேர் கொண்ட ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதுமட்டும் அல்லாமல் அவரது 3 வயது குழந்தை சலீகா உட்பட அவரது குடும்பத்தில் 14 பேர் அந்த கும்பலால் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகின்றனர். இந்த நிகழ்வு நடந்த அடுத்த நாளே பில்கிஸ் பானு தரப்பினர் அகமதாபாத் காவல் நிலையத்தில் குற்றம் செய்தவர்களின் பெயர்களோடு புகார் செய்கின்றனர். காவல் நிலையமோ குற்றவாளிகளின் யாரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்கிறது.
இது போக வழக்கில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் குஜராத் காவல் துறை அதிகாரிகள், குற்றவாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவாகவே செயல்பட்டு வந்து இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் பில்கிஸ் பானு தரப்பினர் உச்சநிதிமன்றத்தை நாடி வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி இருக்கின்றனர். அதற்கு பின்னர் நடந்த பல்வேறு விசாரணைகளுக்கு பின், கிட்டதட்ட 6 ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு, மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யுடி சால்வி பில்கிஸ் பானு வழக்கில், ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
அதாவது 14 பேரை கொலை செய்தது மற்றும் கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், அந்த குற்றத்தில் ஈடுபட்ட ஜஸ்வந்திபாய், கோவிந்த்பாய், சைலேஷ் பட், ராதீஷாம் ஷா, பிபின் ஜோஷி, கேசர்பாய் கோகானியா, பிரதீப் மோர்தியா, பாஹாபாய் வோஹானியா, ராஜன்பாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆகிய 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது போக இந்த வழக்கில் மெத்தனம் காட்டி, மனு தாரர்களையும் மிரட்டி, சாட்சிகளையும் கலைத்ததாக கூறி 7 காவல்துறை அதிகாரிகளையும், இரண்டு மருத்துவர்களையும், சிபிஐ ஆனது நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கும் தண்டனை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு இப்போது ஏன் பேசப்படுகிறது என்றால், பில்கிஸ் பானு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகள் அனைவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ‘14 வருடங்களாக சிறையில் இருந்து விட்டோம், எங்களுக்கு பொது மன்னிப்பு தாருங்கள்’ என உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து பொது மன்னிப்பு கேட்டு இருக்கின்றனர். உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்து இருக்கின்றனர். உச்ச நீதிமன்றமோ குஜராத்தில் ஆளும் அரசு இது குறித்து முடிவெடுத்துக் கொள்ளட்டும் என கூறி இருக்கிறது. இதையடுத்து குஜராத்தின் ஆளும் அரசான பாஜக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பில்கிஸ் பானு வழக்கில் கைதான அத்துனை பேரையும் நிபந்தனைகளின்றி விடுவித்து இருக்கிறது.
’3 வயது சிறுமி உட்பட 14 பேரை கொலை செய்து, ஒரு கர்ப்பிணி பெண்ணையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிகளை எப்படி அரசு அவ்வளவு எளிதில் விடுதலை செய்யலாம்’ என சர்ச்சை கிளம்பவே பில்கிஸ் பானு தரப்பில் குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. மனுவை தீவிர விசாரித்த உச்சநீதிமன்றம், இப்படி ஒரு பெரும் குற்றத்தை செய்த குற்றவாளிகளை விடுவித்த ஆளும் குஜராத் அரசை கடுமையாக சாடி, குற்றவாளிகளை ஜனவரி 21-ற்குள் எந்த வித நிபந்தனையும் இன்றி உடனடியாக சரணடையும் படி உத்தரவிட்டு இருக்கிறது.
“ இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒரு ஆளும் அரசு நினைத்தால் எத்தகைய குற்றம் செய்தவர்களையும் எளிதாக விடுவிக்க முடியும். ஒரு நல்ல நீதீபதி நினைத்தால் எத்தகையை அதிகாரத்தையும் உடைத்து ஒரு சாதாரண எளிய மக்களுக்கும் போராடி நல்லதொரு தீர்ப்பு வழங்க முடியும் என்பது தான் “