Dhruv Rathee | ’ஒரு தனி மனிதன் நினைத்தால் இந்திய அரசியலிலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு இவர் தான் சான்று’
ஒரு சாதாரண யூடியூபரால் இந்திய அரசியலிலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு துருவ் ரதீ ஒரு சான்றாக அமைந்து இருக்கிறார்.
மத்தியில் ஆளும் அரசிற்கு எதிராக துருவ் ரதீ பதிவிட்ட வீடியோக்கள் தான் ஆளும் அரசிற்கு வடக்கு மாநிலங்களில் ஓட்டு குறைந்ததற்கு பெரும் காரணம் என்று ஒரு டால்க் இருக்கிறது. சரி இவர் என்று ஆராய்ந்த போது பெரிய பேக் கிரவுண்ட் எல்லாம் இல்லை. ஹரியானா சொந்த மாநிலம், பொறியியல் முடித்தவர். கடந்த 2013-யில் இருந்தே யூடியிபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
முதலில் பயண வீடியோக்களை பதிவிட்டு வந்த துருவ், நாளடைவில் அரசியலில் ஆர்வம் கொண்டு அரசியல் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். மத்தியில் ஆளும் அரசிற்கு எதிராக, ‘இந்தியா சர்வாதிகார நாடாக மாறுகிறதா?’ என்ற தலைப்பில் பதிவிட்ட இவரது வீடியோ இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் வைரலாக பரவ, அது ஆளும் அரசிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்திய அமைச்சகமே இவரது வீடியோக்களை முடக்கும் அளவிற்கு இவரது வீடியோக்கள் பலருக்கும் சாட்டையடி கொடுப்பதாக அமைந்தது.
வார்த்தைகளால் மட்டும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் அதை ஆதாரத்துடன் வெளியிடுவது துருவ் ரதீ அவர்களின் வீடியோ பெருமளவில் வைரலாகுவதற்கு மற்றுமொரு காரணம். பல மீடியாக்களையும் இவர் தனது வீடியோக்களில் வறுத்தெடுத்து இருக்கிறார். அரசின் பல தேவைகளுக்கு மீடியாக்கள் பெருமளவில் துணை போவதை எல்லாம் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி இருக்கிறார். இவரது வீடியோக்கள் இணையத்தில் மட்டும் பெரும் இம்பேக்ட் கொடுக்காமல் இந்திய அரசியலிலேயே பெரிய இம்பேக்ட் காட்டியது தான் இவரை பற்றி தற்போது பலரும் பேசுவதற்கு காரணம்.
“ ஒவ்வொருவரும் எதிர்த்து கேள்வி கேட்பதன் மூலம் அரசை நிலைப்படுத்தி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது இவரது குறிக்கோள், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் எந்த அரசு தவறு இழைத்தாலும் கேள்வி கேட்பதும், தப்பை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்வதும் தொடரும் என துருவ் ரதீ கூறி இருக்கிறார் “