பாலியல் குற்றவாளி ராம் ரஹீமிற்கு 4 வருடத்தில் 9 முறை பரோல்!
பாலியல் மற்றும் கொலை குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீமிற்கு நான்கு வருடத்தில் 9 முறை பரோல் கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர், நடிகர், பாடகர் இயக்குநர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட குர்மீத் ராம் ரஹீம் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்கு தினமும் ஏதாவது சர்ச்சையை தனக்கு பின்னால் சுமந்து கொண்டே திரிபவர்.
இரண்டு பாலியல் குற்றத்திற்காக 20 வருடம் சிறையும், பத்திரிக்கையாளர் ஒருவரின் கொலை குற்றத்திற்காக வாழ்நாள் முழுக்க சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும் குர்மீத் ராம் ரஹீம் கடந்த 2019-யில் இருந்து நான்கு ஆண்டுகளில் 9 முறை பரோலில் வெளி வந்து சுதந்திரமாக சுற்றித்திரிவது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
“ இவர் உடல் நிலை சரியில்லை என்று பரோலில் வெளி வந்து விட்டு, பொது வெளியில் கிரிக்கெட் விளையாடுவது, வாள்களில் கேக் வெட்டுவது போன்ற சர்ச்சைக்குரிய செயல்களை வைரலாகும் வரை செய்தாலும் கூட மறுபடியும் இவருக்கு பரோல் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது “