இந்தியாவையும் வந்தடைந்ததா வேகமாக பரவக் கூடிய புதிய வகை ஒமிக்ரான் தொற்று?
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமிக்ரான் தொற்று இந்தியாவையும் வந்தடைந்து இருக்கிறதா என்ற அச்சம் தேசத்தில் கிளம்பி இருக்கிறது.
கடந்த நவம்பர் 1 முதல் 26 வரை 95 பயணிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்து இருக்கின்றனர். அவர்களிடம் நடத்திய பரிசோதனையில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அது ஒமிக்ரான் வகை தொற்றாக இருக்குமோ என்ற பீதியில் அரசு விழி பிதுங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுடன் யார் யார் தொடர்பில் இருந்தனர் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு இருக்கும் அதிதீவிர ஒமிக்ரான் வகை தொற்று, கொரோனோ வைரஸ்சின் அடுத்த மாறுதல் என்றே சொல்லப்படுகிறது. ஒரு உடலில் நீண்ட நாள்கள் இந்த வைரஸ்கள் தங்கி இருக்கும் போது இயற்கையாகவே அந்த உடல் கொடுக்கும் எதிர்ப்பு சக்தியினால் இந்த வைரஸ்கள் தங்களை உருமாற்றிக் கொள்கின்றன. அந்த வகையிலேயே இந்த ஒமிக்ரான் வகையும் உருவாகி இருக்க கூடும் என்று பொதுவான கருத்து நிலவி வருகிறது.
“ 2019-இல் தொடங்கிய அலையே இன்னும் உலகம் முழுக்க ஓயாத போது, ஒமிக்ரான் போன்ற புது வகை வைரஸ் உருவாகி இருப்பது உலக நாடுகளை அச்சுறுத்தி இருக்கிறது. மேலும் ஏற்கனவே நாம் ஒவ்வொருவரும் போட்டுக் கொண்டு இருக்கும் தடுப்பூசியானது ஒமிக்ரான் வகைக்கு எதிராக செயல்படுமா என்ற கேள்வியும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது “