குடியுரிமை திருத்த சட்டம் என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள்?
கடந்த 2019 அன்று இயற்றப்பட்டு கடும் எதிர்ப்புகளால் கிடப்பில் போட்டு வைக்கப் பட்டு இருந்த குடியுரிமை திருத்த சட்டம் 2019, திடீரென்று தற்போது இந்தியாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. குடியுரிமைச் திருத்த சட்டம் 2019 என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
குடியுரிமைச் திருத்த சட்டம் 2019
கடந்த டிசம்பர் 2014-ற்கு முன்பிருந்து அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினர்களான இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இச்சட்டம் வழி வகை செய்கிறது.
1955 குடியுரிமைச் சட்டத்தின் படி ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமெனில் குறைந்தபட்சம் 12 வருடங்கள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது குடியுரிமை திருத்த சட்டம் 2019-யின் படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வழி வகுக்கிறது.
உள்நாட்டு நுழைவு சீட்டு மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலந்து ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?
’இஸ்லாமியர்கள் அல்லாத புலம் பெயர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை’ என்ற ஒரு வார்த்தையின் மூலம் இது மத ரீதியான பிளவுதலுக்கு நாட்டை உட்படுத்தி விடுமோ என்னும் கேள்வி ஒரு பக்கம் எதிர்ப்புகளுக்கு காரணமாகி வருகிறது.
இன்னொரு பக்கம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு இச்சட்டம் குடியுரிமை வழங்க எந்த ஒரு வழிவகையும் செய்யவில்லை.
வங்காளத்தில் இருந்து அசாம், திரிபுரா மாநிலங்களில் குடியேறிவரும் வங்காளிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கி விட்டால் வங்காளிகளின் ஆதிக்கம் அங்கு அதிகரித்து விடும் எனவும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
முடிவாக,
பிற நாட்டு சிறுபான்மையினரை அணைத்து இந்திய குடியுரிமை வழங்க நினைக்கும் ஒன்றிய அரசின் சட்டம் மேன்போக்காக சரியாக பட்டாலும் கூட, அதில் இஸ்லாமியர்கள் அல்லாத என்று குறிப்பிட்டு இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர்களை புண்படுத்துவது என்பது ஏற்கத்தக்கதல்ல என்பதே இச்சட்டத்தின் எதிர்ப்பிற்கு பலரும் கூறும் காரணமாக இருக்கிறது.
“ எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அது இந்தியாவின் சமத்துவத்தை சீர்குலைக்காமல் இருக்க வேண்டும், அனைத்து விதமான மக்களின் ஒற்றுமை தான் இந்தியாவின் பலம் என்பதை சுட்டிக் காட்டியே இந்திய அரசியலமைப்பில் சமத்துவத்திற்கான உரிமை என்பது சேர்க்கப்பட்டு இருக்கிறது என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது “