அயோத்தி நிலம் அது உண்மையில் யாருக்கு சொந்தம்? அதன் பின்னால் இருக்கும் வரலாறு தான் என்ன?
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்னும் இடத்தில் இருக்கும் தோராயமாக ஒரு 3 ஏக்கர் நிலம், இந்தியாவில் பல நூற்றாண்டு கால அரசியலாக இருக்கிறது என்பதை யாராலும் நம்ப முடியுமா? ஆம் நம்பி தான் ஆக வேண்டும்.
1992 காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய சமூக நிலப்பிரச்சினை எழுகிறது. பாபர் மசூதி இருந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் அது இந்துக்களுக்கு சொந்தமானது என ஒரு புறம் இந்துக்கள் சொந்தம் கொண்டாட, இன்னொரு பக்கம் இஸ்லாமிய அமைப்புகள் பாபர் மசூதி மற்றும் அதைச் சுற்றி இருக்கும் இடங்கள் அனைத்தும் இஸ்லாமிய அமைப்புகளுக்கே சொந்தமானது என முறையிட ஒரு நிலப்பிரச்சினை தேசம் முழுக்க மத ரீதியான பிரச்சினையாக உருவெடுத்தது.
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு ராமர் கோவிலே இருந்ததாக கூரப்படுகிறது. முகலாய மன்னர்களின் படையெடுப்புகளால் அந்த ராமர் கோவில் முற்றிலுமாக இடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்னர் முகலாய மன்னர் பாபரில் அறிவுறுத்தலில் படி அவரின் தளபதி மீர் பாகி என்பவர் அந்த இடத்தில் மசூதி ஒன்றைக் கட்டினார். பாபரால் கட்டப்பட்டதால் அது பாபர் மசூதி என்றே அழைக்கப்பட்டது.
தொடர்ந்து அயோத்தியில் இருக்கும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே இந்த பாபர் மசூதி குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வந்தால் 1949 முதல் 1989 காலம் வரை பாபர் மசூதி இருந்த இடம் பூட்டியே வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அதற்கு பின்னர் இந்துத்துவா அமைப்புகளும், இஸ்ம்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து பாபர் மசூதி குறித்து பல்வேறு வழக்குகளையும் போராட்டங்களையும் நிகழ்த்தி வந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டம் கலவரமாகி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த மக்களால், டிசம்பர் 6 1992 -யில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த நிலம் சர்ச்சைக்கு உள்ளாகியே வருவதால், உச்சநீதிமன்றம் சார்பில் ஒரு அகழாய்வு குழு பாபர் மசூதி இருந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கிடைத்த பொருட்கள் மற்றும் கட்டிடத்தின் அமைப்புகளை ஆராய்ந்த அந்த அகழாய்வு குழுவினர், பாபர் மசூதி இருந்த இடத்தில் இதற்கு முன்னால் ஒரு பழங்கால இந்திய கட்டிடம் இருந்திருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும், கட்டிடங்கள் முகலாய அமைப்பில் இல்லை எனவும் உறுதி செய்தது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியா முழுக்க சர்ச்சையை கிளப்பிய அயோத்தி வழக்கில் நவம்பர் 9, 2019 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது.
ரஞ்சன் கோகாய் தலைமையிலான, 5 நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வு, அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பாபர் மசூதியின் அடியில் இந்தியாவின் தொன்மையான கட்டிடங்கள் இருந்ததாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு அந்த நிலத்தை கொடுத்து விட முடியாது எனவும், அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான அந்த 2.77 ஏக்கர் இடம் இந்திய அரசுக்கே சொந்தம் எனவும் அறிவித்தது. வேண்டுமானால் அயோத்தி எனப்படும் இராமஜென்ம பூமியில் அறக்கட்டளைகள் மூலம் அரசு சார்பில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் எனவும், அதே அயோத்தியில் மசூதி ஒன்றை கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் சர்ச்சைகளின்றி கொடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பிற்கு பின்னர் 2020-யில் இராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்தியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது அந்த கோவிலில் கட்டுமானப்பணிகள் 80 சதவிகிதம் நிறைவு பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 22 ஜனவரியில் பிரதமர் மோடியின் முன்னிலையில் கோவில் திறக்கப்படவும் இருக்கிறது.
என்ன தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் கூட இன்னமும் இந்த அயோத்தி குறித்த சர்ச்சை புகைந்து கொண்டு தான் இருக்கிறது. வரலாறுகளின் அடிப்படையிலும், அகழ்வாராய்ச்சியின் அடிப்படையிலும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் கூட உண்மையில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு தான் சொந்தம் என்பது இந்திய மக்களிடையே ஒரு புரியாத புதிர் ஆக தான் இருக்கிறது.
“ எந்த மதம் ஆகினும் அது ஒரு புனிதத்தின் சமத்துவம் தான், இங்கு மதமோ நிலமோ பிரச்சினை ஆகவில்லை, அதற்குள் ஒரு அமைப்புகளோ, அரசியலோ புகும் போது தான் பிரச்சினைகள் ஆகிறது, ஒரு நிலம் அதை யாருக்கு சொந்தமாக்கினால் அது நமக்கு சாதகமாகும் என்பதின் கீழ் நடந்த ஒரு அரசியலில், மதங்களின் புனிதம் தோற்று அரசியல் ஜெயித்தது அவ்வளவு தான் “