பாலின சமத்துவத்தை மீறுவதாய் அமைகிறதா 40% மகளிர் இட ஒதுக்கீடு!
தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், அரசு வேலைகளில் இதுவரை 30 சதவிகிதகமாக இருந்த மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்தே சமூகவலை தளங்களில் ஒரு பக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்த வண்ணம் இருந்தது. இது போக ட்விட்டரில் #JusticeForMenInTNPSC என்ற ஹேஷ்டாக்கும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
பொதுவாக அரசு வேலைகளில் மகளிருக்கு 40 சதவிகிதம் இடஒதுக்கீடு என்றால் அந்த 40 சதவிகிதம் முழுமையாக பெண்களுக்கு உரியதாக கருதப்படும். மீதி 60 சதவிகிதம் இருக்கும் வாய்ப்புகள் பொது என கருதப்படும். அதாவது இந்த பொதுவான 60 சதவிகிதத்திற்கும் பெண்கள் ஆண்களுடன் இணைந்து போட்டி போடலாம். இதில் என்ன பாலின சமத்துவம் மீறப்படுகிறது என்பது இந்த இடஒதுக்கீடு குறித்து அடிநாதம் வரை அறியாதவர்கள் பலரின் கேள்வியாக இருக்கிறது. அவர்களுக்கு இதை ஒரு ஆதார நிகழ்வுடன் விளக்கிவிடலாம்.
கடந்த 2019 இல் 30 சதவிகிதம் மகளிருக்கு இடஒதுக்கீடு என்பதன் கீழ் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களில் 180 பேரில் 118 பேர் பெண்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒட்டு மொத்தமாக குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களில் 65.55 சதவிகிதம் பேர் பெண்களாக இருந்து இருக்கின்றனர். இதில் 30 சதவிகிதம் பேர் மகளிர் இட ஒதுக்கீட்டின் மூலம் தேர்வாகி இருந்திருந்தால் மீதி 35.55 சதவிகிதம் பேர் பொதுப்பிரிவில் போட்டி போட்டு தேர்ச்சி பெற்றிருப்பர்.
தற்போது அதே தேர்வு முடிவின் நிலைமையை 40 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீட்டீன் கீழ் ஒப்பிட்டு பார்த்தால் 40 சதவிகிதம் பேர் மகளிர் இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வாகி இருப்பர். 35.55 சதவிகித பெண்கள் பொது பிரிவின் மூலம் தேர்வாகி இருப்பர். தற்போது இந்த நிலைமையில் மீதி இருக்கும் இந்த வெறும் 24.45 சதவிகிதம் மட்டும் தான் ஆண்களுக்கானதா? இது தான் பாலின சமத்துவமா? என்பது தான் இன்று பல்வேறு ஆண் தேர்வாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த அரசு வேலைகளில் இனி வெறும் 25 சதவிகிதம் மட்டும் தான் ஆண்களுக்கானது என்றால், இதுவரை அரசு தேர்வுகளுக்கென்று தன் வயதை பொருட்படுத்தாது வருடக்கணக்கில் முட்டி மோதி படித்து வந்த பல ஆண்களின் கனவு இதில் கரைந்து விடும். பாலின சமத்துவம் என்கிற நீதியும் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் நிச்சயம் தகர்ந்து விடும் என்பதே தேர்வர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.
” இன்னமும் அதிகாரப்பூர்வமாக சட்டம் ஆகாத இந்த 40 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீட்டில் ஏதேனும் திருத்தம் அரசு நிச்சயமாக செய்தாக வேண்டும் என்பதே ஆண் தேர்வாளர்கள் பலரின் கோரிக்கையாக இருக்கிறது “