கேரளத்தில் ஆரம்பமாகிறது இரவு நேர பொதுமுடக்கம்!

நாட்டின் மொத்த தொற்றில் கேரளாவே 80 சதவிகிதத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு கொரோனோ தொற்று கேரளத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (30-08-2021) முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.

மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இந்த பொது முடக்க நேரத்தில் மக்கள் வெளி வருவதற்கு அனுமதி இல்லை என்றும் கடைகள்,ஹோட்டல்கள், திரையரங்குகள் என்று எதுவும் இந்நேரத்தில் திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும் கேரள அரசு அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் யாரும் இரவு 10 மணிக்கு மேல் அங்கும் இங்கும் அவசியமின்று அலைந்து திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பினராயி விஜயன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே கேரளத்தில் தொற்று அதிகரித்தலுக்கு சமூக ஆர்வலர்களும் மருத்துவ வல்லுநர்களும் பெரும்பாலும் இரண்டு கருத்துக்களை கூறுகின்றனர். ஒன்று கேரள அரசு தொற்றின் உச்சகட்ட காலங்களில் தொற்றுக்கு உள்ளான பெரும்பாலானோரை மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்ப்பதை விட்டு விட்டு, வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்த சுதந்திரம் தான் கேரளாவில் நிலவும் இன்றைய இந்த நிலைக்கு காரணம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

மற்றும் ஒரு சிலரோ இந்தியா முழுக்க இந்த நிலையே நிலவுகிறது, அதில் கேரளா மட்டுமே கொரோனோ தொடர்பான புள்ளி விவரங்களை உண்மையாக கையாளுகிறது என்று முதல் கருத்துக்கு முற்றிலும் மாறான கருத்து ஒன்றை தெரிவிக்கின்றனர். இதில் எது உண்மை என்பது தேசம் முழுக்க நெருக்கடி நிலைக்கு உள்ளாகும் போது தான் தெரியும்.

“ படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்றால் கேரளம் என்று தேசமே சொல்லும். அவர்களுக்கு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை புரிந்து கொள்ள முடியவில்லையா இல்லை கட்டுப்பாடுகளிலும் சுதந்திரம் தேடுகின்றனரா என்பது தான் புரியவில்லை. எதுவாகினும் சரி கேரள தேசம் இந்த பேரிடரில் இருந்து நல்லப்டியாய் மீள்வதையே விரும்புகிறோம் “

About Author